சென்னை: இந்திய அரசின் சுகாதாரக் கணக்குத் திட்டத்தின்கீழ், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் அதில் சிகிச்சை விவரங்கள் அனைத்தையும் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு ஆதார் அட்டை அவசியம் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்’ திட்டத்தின்கீழ் இந்திய சுகாதார மேலாண்மைத் தகவல் அமைப்பு (எச்எம்ஐஎஸ்) செயல்படுகிறது.
இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சை விவரங்கள் சேகரித்து வைக்கப்படுகின்றன.
எனினும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 203 மருத்துவமனைகள் இந்த விவரங்களைச் சேகரிப்பதில்லை எனத் தெரிவித்துள்ள இந்திய மருத்துவ ஆணையம், அம்மருத்துவமனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், தமிழகத்தில் 25 அரசு, தனியார் மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சுகாதாரக் கணக்குமுறை நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் பயனளிக்கக் கூடியது என்றும் ஒருமுறை இந்த கணக்கைத் தொடங்கிவிட்டால், பிறகு நாட்டில் எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் ஒருவர் அங்கு தனது கைப்பேசி எண்ணை மட்டும் கொடுத்தால் போதும்.
இதன்மூலம் அவர் இந்நாள் வரை பெற்ற முழு மருத்துவச் சிகிச்சை விவரங்களைப் பெற முடியும்.
கடந்த காலத்தில் அவருக்கு ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா, அவருக்கான மருந்து, மாத்திரைகள் என ஒருவரது அனைத்து மருத்துவ விவரங்களையும் புதிதாகச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அல்லது மருத்துவமனை தெரிந்துகொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தை இந்தியா முழுவதும் தீவிரமாகச் செயல்படுத்த உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


