டேராடூன்: உத்தராகண்டில் ஜூலை 11ஆம் தேதியன்று (சனிக்கிழமை) இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணமாக, மருத்துவமனை ஒன்றின் குடியிருப்பு வளாகச் சுவர் இடிந்து விழுந்ததில் அரசு மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.
அம்மாநிலத்தில் பருவமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் போக்குவரத்தை முடக்கியுள்ளன. மேலும், ஜூலை 17ஆம் தேதி வரை கனமழையும் இடியுடன் கூடிய புயலும் நீடிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சாமோலி மாவட்டத்தின் நாராயணபாகர் பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தின் மருத்துவ அதிகாரியான டாக்டர் நவீன் திம்ரி, குடியிருப்புக் கட்டடத்திற்கு அருகே மழையினால் சேதமடைந்த சுவரை ஆய்வு செய்தார்.
அப்போது, அது திடீரெனச் சரிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதற்கிடையே, சிரோபாகர்-கான்க்ரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜூலை 11ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் மலைப்பகுதியிலிருந்து பாறைகள் உருண்டு விழத் தொடங்கியதை அடுத்து, அந்த நெடுஞ்சாலை கிட்டத்தட்ட 10 மணி நேரம் மூடப்பட்டது.

