இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மோசமான நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகக் குலு மாவட்டத்தில் உள்ள மலானா - I நீர்மின் திட்டத்திற்குட்பட்ட தடுப்பணை ஒன்று இடிந்து விழுந்ததால் அந்த வட்டாரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
அந்தப் பாதையில் பல வாகனங்கள், கனரக இயந்திரங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இந்த நிகழ்வுகள் அனைத்தும், கடுமையான மழையை மாநிலம் சந்திக்க நேரிட்டால் உள்கட்டமைப்பு வசதிகள் அதனை எதிர்கொள்ளப் போதுமான அளவு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக இந்தச் சம்பவத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றபோதும். கடந்த ஆண்டு இதேபோல் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததை அடுத்து உள்ளூர்வாசிகள் அமைத்த மரப் பாலத்தையும் அண்மைய வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டதால் கிராம மக்கள் திகைப்பில் மூழ்கியுள்ளனர்.
இதனால் மலானா கிராமம் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டது. மண்டி, சம்பா, குலு, காங்க்ரா மற்றும் உனா மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக எராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.
மேலும் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டு, மின்சார சேவை மற்றும் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளன.
நேற்றைய நிலவரப்படி 2,383 சாலைகள் பாதிப்படைந்து, 747 மின்மாற்றிகள் செயலிழந்துள்ளதாகவும், இந்தச் சேதம் காரணமாக 242 நீர் விநியோக அமைப்புகள் செயல்படவில்லை என்றும் மாநில அரசின் செய்திக்குறிப்பு அறிவித்தது. இந்த இடர்களால் மாநிலம் நிலைகுத்தியுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் கூறின.