தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தி நடிகர் சைஃப் அலிகானுக்கு ஆறு இடங்களில் கத்திக் குத்து: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

2 mins read
de7d9e3f-2d34-4d81-aeb6-6074c16dfca7
சைஃப் அலிகான். - படம்: ஊடகம்

மும்பை: பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்துக்குள்ளாகி மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் ஆறு இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சைஃப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த சந்தேகப் பேர்வழி ஒருவர், அவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

மும்பை பாந்த்ரா மேற்குப் பகுதி யில் வசித்து வருகிறார் சைஃப் அலிகான். வியாழக்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அவரது வீட்டுக்குள் ஒரு திருடன் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

அதைக் கண்ட சைஃப் அலிகான், அந்த ஆடவரைப் பிடிக்க முயன்றபோது கைகலப்பு ஏற்பட்டதாகவும் அப்போது அவர் கத்தியால் தாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

வீட்டுக்குள் நுழைந்த, அடையாளம் தெரியாத அந்த ஆடவர் தப்பி ஓடிவிட்ட நிலையில், சைஃப் அலிகானை அவரது குடும்பத்தார் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது உடலில் இருந்து ஒரு கத்தியின் இரண்டரை அங்குல நீளமுள்ள பகுதி அகற்றப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், அம்மருத்துவமனையின் தலைமைச் செயலதிகாரியான மருத்துவர் நீரஜ் உத்தமானி கூறுகையில், சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவரது உடலில் ஆறு இடங்களில் காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

“அவரது முதுகுத் தண்டுவடம் அருகே பெரிய காயம் இருந்தது. அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நரம்பியல் நிபுணர், காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக்குழு அறுவை சிகிச்சையை மேற்கொண்டது,” என்றார் நீரஜ் உத்தமானி.

இச்சம்பவம் திரையுலகத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மும்பை காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

அண்மையில், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் இணைந்து நடித்த ‘தேவரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சைஃப் அலிகான்.

இதற்கிடையே, மகாராஷ்டிராவில் பிரபலங்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லை என அம்மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

எனினும், இதை மறுத்துள்ள மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னாவிஸ், இந்தியாவில் உள்ள மாநகரங்களில் மிக பாதுகாப்பான நகரம் மும்பைதான் என்றார்.

“அவ்வப்போது இதுபோன்ற சில நிகழ்வுகள் நடைபெறுவது உண்மைதான். அதற்காக மும்பை பாதுகாப்பற்ற நகரம் என்று சொல்வது சரியல்ல,” என்று முதல்வர் ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.

சைஃப் அலிகான் விரைவில் நலம்பெற விழைவதாக மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்