ஆஸ்திரேலியாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒத்துழைப்பு: மோடி

ஆஸ்திரேலியாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒத்துழைப்பு: மோடி

2 mins read
f952ffd1-3e6e-4b6a-846a-fd4ddf4c1ba2
மெல்பர்ன் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் (வலது). - படம்: இபிஏ

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவுடன் இந்தியா கொண்டுள்ள உறவு அணுசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்புகளை வழங்கி இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா வசமுள்ள தொழில்நுட்பம், மூலதனம் மற்றும் வளங்கள் இந்தியாவின் எரிசக்தி உருமாற்றத்திற்கு உதவக்கூடும் என்றும் கூறிய அவர், கரிமம் குறைந்த அலுமினியத் திட்டங்களில் இருநாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரிவித்தார்.

மூன்றுநாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு புதன்கிழமை (ஜூலை 8) இரவு மெல்பர்ன் வந்திறங்கிய திரு மோடி, மறுநாள் ஆஸ்திரேலிய-இந்தியப் பொருளியல் வரைவுத் திட்டம் தொடர்பான வர்த்தக நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுப் பேசினார்.

தங்களுக்கு இடையிலான பொருளியல் உறவுகளை ஆழப்படுத்த இரு நாடுகளும் முயன்று வரும் வேளையில் அவரது ஆஸ்திரேலிய வருகை அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் யுரேனியக் கையிருப்பு இந்தியா தனது 100 கிகாவாட் அணு எரிசக்தி இலக்கை 2047க்குள் எட்டும் இலக்கை அடைய உதவும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

அதேபோல, ஆஸ்திரேலியாவும் தனது உயர்மட்டக் கூட்டாளியான சீனாவுக்கு அப்பால் இதர நாடுகளிலும் வர்த்தகத்தை விரிவுபடுத்தி பன்முகப்படுத்த முயன்று வருகிறது.

“ஆஸ்திரேலியாவுடன் ஒத்துழைக்க இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்புகள் உள்ளன,” என்று கூறிய திரு மோடி, இந்தியாவின் சாலை, துறைமுகம், ரயில்வே மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களில் நீண்டகால முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஆஸ்திரேலிய வர்த்தகச் சமூகத்தினரை வலியுறுத்தினார்.

“ஆஸ்திரேலிய வர்த்தகர்களின் முதலீடுகளுக்குப் பாதுகாப்பான, நிலையான, நீடித்த வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இந்திய அரசாங்கம் வழங்கும்,” என்றார் அவர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய ஓய்வூதிய நிதியமான ஆஸ்திரேலியன்சூப்பர், இந்தியாவின் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில் மேலும் 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள (US$347 மில்லியன்) முதலீடுகளைச் செய்ய இருப்பதாக வியாழக்கிழமை (ஜூலை 9) அறிவித்தது.

முன்னதாக, திரு மோடிக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள இந்தியச் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் ஆஸ்திரேலிய இந்திய இசைக்குழுவின் ‘வந்தே மாதரம்’ இசை நிகழ்ச்சியுடன் அந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்திய இந்தியச் சமூகத்தினர், இந்திய நாட்டையும் பிரதமர் மோடியையும் வாழ்த்தி முழக்கமிட்டனர்.

குறிப்புச் சொற்கள்