உஜ்ஜைனி உணவகத் திறப்பு விழாவில் நடனமாடிய இயந்திர மனிதன்

உஜ்ஜைனி உணவகத் திறப்பு விழாவில் நடனமாடிய இயந்திர மனிதன்

படம்: எக்ஸ்/@ஹர்ஷ் கோயங்கா

26 Aug 2026 - 10:09 pm

1 mins read

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் புதிதாகத் திறக்கப்பட்ட சாண்ட்விச் உணவகம் ஒன்றின் திறப்பு விழாவில், இயந்திர மனிதன் (ரோபோ) ஒன்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெற்ற அந்த சம்பவம் குறித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களுடன் உணவகத்துக்கு வருகையளித்த அந்த இயந்திர மனிதன், நுழைவாயிலில் இருந்த மக்களுடன் கை குலுக்குகிறது.

பின்னர், அதன் கழுத்தில் பாரம்பரிய முறைப்படி காவித் துண்டு போர்த்தப்பட்டு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து, திறப்பு விழாச் சடங்கிலும் பாரம்பரியப் பூசையிலும் அது கலந்துகொள்கிறது.

விழாவின் இறுதியில் அந்த இயந்திர மனிதன் அடுத்தடுத்து பல்வேறு நடன அசைவுகளை வெளிப்படுத்தி, அங்குத் திரண்டிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இந்தச் சம்பவத்தின் காணொளியைத் தமது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், காவித் துண்டு அணிந்து, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் வந்து திறப்பு விழாவில் இயந்திர மனிதன் கலந்துகொள்வதைச் சுட்டிக்காட்டி, “இதில் ஏதேனும் நியாயம் உள்ளதா? இந்தியாவில் மட்டும்தான் இப்படி நடக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. சிலர், அன்றாட வாழ்க்கையில் இயந்திர மனிதர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது என்றும் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு இவை சவாலாக அமையும் என்றும் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்