புதுடெல்லி: இந்திய அளவில் சிறந்த கல்வி நிலையங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முதலிடம் பிடித்துச் சாதித்துள்ளது.
இந்தியக் கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்), ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிலையங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிடுவது வழக்கம். தற்போது 2025ம் ஆண்டுக்கான தரப்பட்டியல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள 8,686 கல்வி நிலையங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றுள் தென்னிந்தியாவிலிருந்து மட்டும் 3,344 கல்வி நிலையங்கள் பங்கேற்றன.
கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, தொழில்முறைப் பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆராய்ச்சி, பொறியியல், மேலாண்மை, துணை மருத்துவம், மருத்துவம், சட்டம், வேளாண்மை ஆகிய பிரிவுகளின்கீழ் சிறந்த கல்வி நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த ஆண்டுக்கான பட்டியலில், ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்தது. தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக சென்னை ஐஐடி இச்சாதனை படைத்துள்ளது.
முதல் பத்து இடங்களில் ஆறு ஐஐடி கல்விக் கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

