இந்தியாவுக்குள் மலிவான எஃகு பொருள்கள் இறக்குமதி: சீனா, ரஷ்யாவுக்கு எதிராக விசாரணை

இந்தியாவுக்குள் மலிவான எஃகு பொருள்கள் இறக்குமதி: சீனா, ரஷ்யாவுக்கு எதிராக விசாரணை

2 mins read
6d238ac5-474e-4430-9e8e-bdf070020778
இந்தியாவுக்குள் மலிவான பொருள்களை குவித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சீனா, ரஷ்யாவுக்கு எதிராக விசாரணை நடத்த இந்திய வர்த்தக அமைச்சு திட்டமிட்டுள்ளது. - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: குறைந்த விலையிலான எஃகு பொருள்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மீது பொருள் குவிப்புக்கு எதிரான விசாரணையை தொடங்கவுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சு தெரிவித்தது.

இது தொடா்பாக ஜேஎஸ்டபுள்யூ, ஜேஎஸ்டபுள்யூ விஜயநகா் மெட்டாலிக்ஸ் மற்றும் ஜிண்டால் ஆகிய நிறுவனங்கள் அளித்த புகாரையடுத்து, இந்த நடவடிக்கையை வா்த்தக அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.

அந்தப் புகாரில், ‘அதிக வெப்பநிலையில் வடிவமைக்கப்பட்ட எஃகு பொருள்கள் இந்தியாவுக்குள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் இந்தத் தொழிலைச் சாா்ந்திருக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படையும்’ என குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2022 முதல் 2025 வரையிலான எஃகு பொருள்கள் இறக்குமதி தரவுகளை பரிசீலித்து வா்த்தக நிவாரணங்களுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிடிஆா்) விசாரணையைத் தொடங்கவுள்ளது.

இதுகுறித்து டிஜிடிஆா் வெளியிட்ட அறிவிக்கையில், வழக்கமான சந்தை விலையைவிட மிகவும் குறைவான விலையில் சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து எஃகு பொருள்கள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்குள் மேற்கூறிய நாடுகளைச் சோ்ந்த ஏற்றுமதியாளா்கள் பொருள் குவிப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. முதல்கட்ட விசாரணையில் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு சீனா, ரஷியா மற்றும் ஜப்பானிடம் பொருள் குவிப்புக்கு எதிரான விசாரணை தொடங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தவிர செயற்கை சீறுநீரக கருவிகள் (டயாலைசா்) சீனா மற்றும் மலேசியாவில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக விசாரித்து வருவதாகவும் டிஜிடிஆா் வெளியிட்ட மற்றொரு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்