மும்பை: திரைப்பட நடிகை ரகுல் பிரீத் சிங், அவரது மாமனாரும் தயாரிப்பாளருமான வாசு பக்னாயின் ‘பனோரமா ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மும்பையில் உள்ள அலுவலகங்கள், வீடுகள் உட்பட மொத்தம் 12 இடங்களில் இச்சோதனை நடைபெறுகிறது.
திரைப்படத் தயாரிப்பு, வெளிநாட்டு விநியோகம், நிதி ஒதுக்கீடு என்ற பெயரில், சட்டவிரோதமாகப் பெரும்தொகை வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மும்பை வருமான வரித்துறையின் பல தனிப்படைகள் கணக்கு வழக்குகள், வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள், வெளிநாட்டு நிதித் தொடர்புகள் குறித்த ஆவணங்களை நேரில் ஆய்வு செய்தன. திரைப்பட நிதி மேலாண்மையில் வரி ஏய்ப்பு, நிதி முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
நடிகை ரகுல் பிரீத் சிங், பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களது குடும்பத்தின் பின்னணியிலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களான பூஜா என்டர்டெயின்மென்ட், பனோரமா ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் நிதிப் பரிவர்த்தனைகன் தொடர்பாகவும் ஆய்வு தொடர்கிறது.
சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், முறைகேட்டின் முழு விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியாகும் எனத் தெரிகிறது.
