ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அறுவை சிகிச்சை மூலமான ‘சிசேரியன்’ பிரசவங்கள் பெண்களிடையே அதிகரித்துள்ளதாக தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் கல்வி, மின்னிலக்கப் பயன்பாடு ஆகியவற்றில் தெலுங்கானா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் 98.6 விழுக்காட்டு வீடுகள் மின்சார வசதி பெற்றுள்ளன. அதேபோல் 98.2 விழுக்காட்டு வீடுகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியைக் கொண்டுள்ளன.
மேலும், மாநிலத்தில் 98.8 விழுக்காட்டுப் பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடைபெற்றுள்ளன. இவற்றில் 97.7 விழுக்காட்டுப் பிரசவங்கள் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்களின் மேற்பார்வை, உதவியுடன் நிகழ்ந்தன.
மகப்பேற்றுப் பராமரிப்புக் குறியீடுகளில் மாநிலம் தொடர்ந்து நற்பெயரைத் தக்கவைத்து வருகிறது.
81 விழுக்காட்டுத் தாய்மார்கள் இரும்புச்சத்து, ஃபோலிக் அமில மாத்திரைகளை நூறு நாள்கள் அல்லது அதற்குமேல் உட்கொள்கிறார்கள். மேலும், 80 விழுக்காட்டுத் தாய்மார்கள் மகப்பேற்றுக்கு முந்தைய பரிசோதனையை நான்கு முறையாவது செய்துகொள்கிறார்கள்.
குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் படிப்படியாகக் குறைந்துவந்தாலும், அறுவை சிகிச்சைப் பிரசவங்கள் அதிகரிப்பது கவலை அளிப்பதாக தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் சிசேரியன் பிரசவங்களின் விகிதம் 60.7 விழுக்காட்டில் இருந்து 62.2ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் இந்த விகிதம் அதிகமாக உள்ளதை ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், தொற்றா நோய்களின் தாக்கமும் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. கைப்பேசிப் பயன்பாடு, வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சமூகக் குறியீடுகளில், தெலுங்கானா பெண்கள் மின்னிலக்கத் தொழில்நுட்பத்திலும் கல்வியிலும் சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இணையத்தளங்களைப் பயன்படுத்திய பெண்களின் எண்ணிக்கை 26.5 விழுக்காட்டில் இருந்து 64.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
மேலும், 10 ஆண்டுகள் அல்லது அதற்குமேல் பள்ளிப்படிப்பு முடித்த பெண்களின் எண்ணிக்கை 45.5 விழுக்காட்டிலிருந்து 51.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்பதை ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

