மும்பை: அன்றாடப் படப்பிடிப்பு நேரத்தை எட்டு மணி நேரமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்தித் திரையுலகில் (பாலிவுட்) வலுத்து வருகிறது. தயாரிப்பாளர்களுக்கும் முன்னணி நடிகர்களுக்குமான மோதலாகவும் இது உருவெடுத்துள்ளது.
பொதுவாக, இந்தித் திரையுலகில் பணியாற்றும் விதம் குறித்து மாறுபட்ட கருத்துகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன.
இதுகுறித்து அவ்வப்போது முணுமுணுப்புகள் எழுந்தாலும், ஓரிரு தருணங்களில் சிலர் ஒன்றுகூடி ஓரளவு விவாதித்தாலும் நல்ல தீர்வு மட்டும் இதுவரை கிடைத்தபாடில்லை.
இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகு தாய்மை அடைந்திருந்த நடிகை தீபிகா படுகோன், பிரசவத்துக்குப் பிறகு தனது வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்க விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் பெரிய படம் ஒன்றில் இருந்து அவர் விலக நேரிட்டது.
இந்தியத் திரையுலகில் நிலவும் வேலை-வாழ்க்கை சமநிலை குறித்த பிரச்சினையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததுடன், புது விவாதங்களையும் எழுப்பியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பாலிவுட்டில் அன்றாடப் பணி நேரம் என்பது 12 முதல் 18 மணி நேரம் வரை நீடிக்கும். சில சமயங்களில் ஒரு நாளைக் கடந்தும்கூட படப்பிடிப்பு நீடிக்கும்.
முன்பு இதை இயல்பாக ஏற்றுக்கொண்டு அனுசரித்துச் சென்றவர்களும்கூட இன்றைய உலக, பணிச்சூழல்களுக்கு மத்தியில் பணி நேர வரம்புகளுக்கான கோரிக்கைகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
பாலிவுட் பணிச்சூழலின் நேர அட்டவணை பெண்கள் மீதான அழுத்தங்களை அதிகரிப்பதாகச் சீர்திருத்த ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
கோரிக்கை எழுப்புவோர் திமிர் பிடித்தவர்கள் என முத்திரை குத்தப்படுகிறார்கள் என்பதும் அவர்களின் வாதம்.
பெரும்பாலும் ஆண் கலைஞர்கள் இத்தகைய சிக்கலை எதிர்கொள்வது அரிது என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஒருசில நடிகர்கள், பல முன்னணி நட்சத்திரங்கள் பணி நேர வரம்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பெண் கலைஞர்களின் முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவித்திருப்பது ஆறுதல் அளிப்பதாக ஒருதரப்பு கூறுகிறது.
எட்டு மணிநேரப் பணி என்பது நடைமுறைக்குச் சாத்தியமல்ல என்றும் வானிலை இடையூறுகள், தொழில்நுட்பக் கோளாறுகள், கலைஞர்களின் உடல்நலம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய எதிர்பாராத மாற்றங்கள் திட்டமிட்ட கால அட்டவணைகளைத் தடம்புரளச் செய்யக்கூடும் என்று மற்றொரு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாள்தோறும் ஏறக்குறைய $33,200 மதிப்பிலான தொகை படப்பிடிப்புக்குச் செலவாகிறது. எனவே, படப்பிடிப்பு நேரத்தை இயன்றவரை அதிகபட்சமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அழுத்தம் ஏற்படுகிறது எனத் தொழில்துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

