இந்தியாவும் சீனாவும் பாரம்பரிய நட்புறவைத் தொடர வேண்டும்: மோடி

இந்தியாவும் சீனாவும் பாரம்பரிய நட்புறவைத் தொடர வேண்டும்: மோடி

2 mins read
0f2693d0-843f-45ce-8336-11bdc74f5ca7
மாநாட்டின்போது, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்தியப் பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) நேரில் சந்தித்துப் பேசினார். - படம்: சீனா டெய்லி ஏசியா
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியாவும் சீனாவும் தங்களுடைய பாரம்பரிய நட்புறவைத் தொடர வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் தெற்குலக நாடுகளின் பொதுநலன்களைப் பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘பிரிக்ஸ்’ அமைப்பு உறுப்பு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.

அதில் பங்கேற்க புதுடெல்லி சென்ற சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்தியப் பிரதமர் மோடியைச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) நேரில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் சுழற்சிமுறைத் தலைமைப் பதவியை சீனா ஏற்பதை இந்தியா ஆதரிப்பதாகவும் பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக சீனாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சரிடம் திரு மோடி கூறினார்.

இரு நாடுகளும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நட்புறவுப் பரிமாற்றங்களைக் கொண்ட பண்டைய நாகரிகங்கள் என்று சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இரு நாடுகளும் நீண்ட காலமாக உலகின் முன்னணி, ஆதிக்கச் சக்திகளாக விளங்கின என்றார்.

இந்த நட்புறவு நீடிக்க வேண்டும் என்று தமது விருப்பத்தை வெளிப்படுத்திய திரு மோடி, உயர்மட்ட பரிமாற்றங்களை இருதரப்பும் பேணிப் பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தியாவும் சீனாவும் தெற்குலகின் ஆகப்பெரிய வளரும் நாடுகள் என்று குறிப்பிட்ட அவர், உலகின் தென் பகுதி நாடுகளுக்கிடையே ஒற்றுமையையும் தன்னம்பிக்கையையும் ஊக்குவிப்பதில் இரு நாடுகளும் பங்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதனிடையே, பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேம்பட, இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்படும் என திரு வாங் யீ குறிப்பிட்டார்.

இருதரப்புத் தலைவர்களும் செய்துகொண்டுள்ள முக்கியமான உடன்பாடுகளைச் செயல்படுத்தவும் நுணுக்கமான பிரச்சினைகளை முறையாகக் கையாளவும் இருதரப்பும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இதற்கு சீனா முழுமையாக ஒத்துழைக்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்