லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு அதிகாரபூர்வ பெயர்களை அறிவித்த இந்தியா

லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு அதிகாரபூர்வ பெயர்களை அறிவித்த இந்தியா

கோப்புப் படம்: இந்தியா டுடே

03 Oct 2026 - 11:58 pm

2 mins read

புதுடெல்லி: கிழக்கு லடாக் பகுதியில் அமைந்துள்ள 28 எல்லைப் பகுதிகள், புவியியல் அம்சங்களுக்கு இந்தியா அதிகாரபூர்வ பெயர்களைச் சூட்டி, அவற்றை இந்திய நில அளவைத் துறையின் வரைபடத்தில் முறைப்படி சேர்த்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து இந்த இடங்கள் துல்லியமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

எல்லைப் பகுதிகளில் உள்ள நிலப்பரப்புகளைத் துல்லியமாகப் பதிவு செய்யவும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் சிகரங்கள், மலைத்தொடர்கள், கணவாய்கள், பனியாறுகள், பள்ளத்தாக்குகள், ஏரிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதிஷா கிரி, கனிஷ்க சிகரம், மார்த்தாண்ட கிரி, சோரவர் சிகரம், ரிஞ்சன் சாங்போ, மார்பா லோட்சவா ஆகிய சிகரங்கள் இடம்பெற்றுள்ளன.

பர்பிக், ஸ்கம்ரி பனியாறுகள், குரு ரின்போச்சே ஏரி, ஷ்கோர்கா பள்ளத்தாக்கு, யாங்பா ஆறு ஆகியவையும் 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்திய-சீனப் படைகளுக்கு இடையே பதற்றம் நிலவிய ‘கோக்ரா’, ‘ஹாட் ஸ்பிரிங்’ ஆகிய பகுதிகளும் இந்த அதிகாரபூர்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல இடங்களுக்குச் சீனா தன்னிச்சையாகச் சீனப் பெயர்களைச் சூட்டி உரிமை கோரி வரும் சூழலில், இந்திய நில அளவைத் துறை மூலம் லடாக் எல்லைகளுக்குச் சொந்தப் பெயர்களை முறைப்படுத்தியுள்ளது தூதரக ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

இதுகுறித்து இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், சீனா பற்றியோ அல்லது எல்லைப் பிரச்சினை குறித்தோ நேரடியாக எதையும் குறிப்பிடவில்லை.

இருப்பினும், வரைபடத்தில் அதிகாரபூர்வமாகப் பதிவேற்றியதன் மூலம், எல்லைப் பகுதியில் தனது இறையாண்மையையும் புவியியல் அதிகாரத்தையும் இந்தியா வலுவாகப் பறைசாற்றி உள்ளதாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்