குவைத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் தாயகம் கொண்டுசெல்லப்பட்டன

குவைத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் தாயகம் கொண்டுசெல்லப்பட்டன

3 mins read
c5187f5b-c888-4513-9dce-4a0ae13c294f
குவைத்தில் உயிரிழந்த 45 பேரின் (தமிழர்கள் 7 பேர்) உடல்களைக் கொச்சிக்குக் கொண்டுசென்ற இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 3

புதுடெல்லி: குவைத்தில் ஜூன் 12ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் 45 பேரின் உடல்கள், சிறப்பு விமானம் மூலம் தாயகம் கொண்டுசெல்லப்பட்டன.

இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) காலை 11 மணியளவில் (இந்திய நேரம்) கேரள மாநிலத்தின் கொச்சி அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்தது.

இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தமது எக்ஸ் தளப் பதிவு மூலம் இதனை உறுதி செய்துள்ளார்.

இந்திய விமானப் படை விமானத்தில் குவைத் சென்ற அவர், விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களைப் பெற்று தாயகம் அனுப்பிவைத்தார்.

விமானம் கொச்சி விமான நிலையத்தை அடைவதற்கு முன்பே அங்குக் காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மாண்டோரின் உடல்களைக் கொண்டுசெல்ல ஏதுவாக மருத்துவ உதவி வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கொச்சியில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு அந்தந்த மாநில அரசு அதிகாரிகளின் ஏற்பாட்டில் உயிரிழந்தோர் உடல்கள் கொண்டுசெல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அவரவர் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

விமானம் தரையிறங்கியதும் சவப்பெட்டிகள் அனைத்தும் கொச்சி விமான நிலையத்தின் சரக்கு வளாகத்தில் தனித்தனி மேசைகளில் அடுக்கப்பட்டன. மாண்டோரின் புகைப்படங்கள் அவற்றின்மேல் வைக்கப்பட்டிருந்தன.

குடும்பத்தினர், நண்பர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பல தரப்பினரும் அஞ்சலி செலுத்திய வேளையில், காவல்துறை மாண்டோருக்கு மரியாதை அணிவகுப்பை நடத்தியது.

தீ விபத்தில் பலியானோரில் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரன் கோவிந்தன், கடலூரைச் சேர்ந்த சின்னத்துரை கிருஷ்ணமூர்த்தி, திண்டிவனத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப், தூத்துக்குடியைச் சேர்ந்த வீரசாமி மாரியப்பன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு, திருச்சியைச் சேர்ந்த ராஜு எபிநேசன், பேராவூரணியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோரும் அடங்குவர்.

தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களின் உடல்களை பெற்றுக்கொள்வதற்காக அயலகத் தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சி சென்றதாக இந்திய ஊடகங்கள் கூறின.

குவைத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளிநாட்டு ஊழியர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.

அந்தக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் சமையல் அறையில் ஜூன் 12ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் திடீரென தீ மூண்டது. தீ விரைந்து பரவியதில் 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயம் அடைந்தனர்.

உயிரிழந்தோரில் 45 பேர் இந்தியர்கள். இவர்கள் அனைவரும் 20க்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

மாண்டோரில் 24 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. கொச்சி விமான நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட மாண்டோரின் உடல்களுக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அஞ்சலி செலுத்தினார். இந்த விபத்து தேசிய அளவிலான துக்கச் சம்பவம் என்றார் அவர்.

இதற்கிடையே, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் 965 65505246 என்ற தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

தீ விபத்து குறித்து வேதனை தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். அதேபோல் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்