புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் சியாங் நதியின்மீது 13.2 பில்லியன் அமெரிக்க வெள்ளி ($17 பில்லியன்) செலவில் நீர்மின் நிலையத்திற்கான அணை கட்ட இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சீனாவும் திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ஒரு பெரிய அணையைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது.
இந்த நதி அருணாச்சலப் பிரதேசத்துக்கு அருகே அமைந்துள்ளது. திபெத்தில் யார்லுங் சாங்போ என்றும் இந்தியாவில் பிரம்மபுத்திரா என்றும் அது அழைக்கப்படுகிறது. இவ்விரு அணைகளும் கட்டி முடிக்கப்பட்டால், மில்லியன் கணக்கான மக்களின் உயிர்நாடியாக உள்ள தெற்காசியாவின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றான பிரம்மபுத்திராவைப் பெரிதும் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
மிகப் பெரிய அணைக் கட்டுவதில் இவ்விரு நாடுகளும் காட்டும் ஆர்வம் அவ்விருவருக்கும் இடையிலான தீவிர புவிசார் அரசியல் போட்டியையும் எரிசக்தி தேவையையும் பிரதிபலிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இதுபோன்ற பெரிய அணைகள் ஆற்றின் நீர் ஓட்டத்தையும் வெள்ளக் கட்டுப்பாட்டையும் பாதிக்கும். மேலும், நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய பகுதியில் அவ்விரண்டும் கட்டப்படுகின்றன.
அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய அரசு கட்டத் திட்டமிட்டுள்ள நீர்மின் நிலையத்தின் மூலம் 11.2 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அந்நாடு திட்டமிட்டுள்ளது.
அதை உத்திபூர்வத் தேவை எனக் குறிப்பிட்டுள்ள இந்தியா, அந்நிலையம் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வது மட்டுமன்றி, சீனாவின் மெடோக் நீர்மின் நிலையத்தால் ஏற்படும் சாத்தியமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் மெடோக் அணை அருணாச்சலப்பிரதேச மக்களுக்கு ஓர் அச்சுறுத்தல் என இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், வறண்ட காலங்களில் நதியின் நீர் ஓட்டத்தை 85 விழுக்காடு வரை அது குறைக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
அவற்றைத் தடுக்க தீவிர ஆலோசனைக்குப் பிறகே சியாங் நதியின்மீது பெரிய அளவிலான அணையைக் கட்ட இந்தியா திட்டமிட்டதாகக் குறிப்பிடப்பட்டது.