இந்தியாவுக்கும் ஆசியான் வட்டாரத்திற்கும் உள்ள பொதுவான, இந்து-பெளத்த மரபிற்கு ஆசியான் நாடுகளில் இன்றளவும் காணப்படும் தொல்பொருள்களே சான்று.
இந்தியா முழுவதிலுமுள்ள பண்டைய அகழாய்வுத் தளங்களில் செயலாற்றிய அனுபவமுள்ள இந்திய அகழாய்வுத் துறை, ஆசியானில் தன் பங்காளித்துவத்தை விரிவுபடுத்த முனைகிறது.
இந்திய அகழாய்வுத் துறை அலுவலகத்திற்குக் கடந்த வாரம் சென்றிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அகழாய்வுத் துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் ஜான்விஜ் சர்மா, கம்போடியாவுடனும் மியன்மாருடனும் இந்தியா மேற்கொண்டு வரும் திட்டங்களைக் குறிப்பிட்டார்.
“தெற்காசியாவுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையே நிலவிய நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நீடித்த உறவே, தற்போதுள்ள கூட்டுறவிற்கு அடித்தளமாகும். ஆசியானில் காணப்படும் பழங்காலக் கட்டடக்கலையிலும் சிற்பக்கலையிலும் இந்தப் பொதுவான மரபு தென்படுகிறது,” என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் செலவு செய்கிறது. இது உதவி மட்டுமன்று. நிலைத்து நிற்கும் உறவுகளையும் இருபக்க நம்பிக்கையும் வளர்ப்பது பற்றியது என்று திரு சர்மா கூறினார்.
கம்போடியாவில் தா புரோம் (Ta Prohm), பிரா விகார் (Preah Vihear) ஆகிய ஆலயங்களில் பராமரிப்புப் பணித்திட்டம், லாவோசில் வாட் பூ ஆலய வளாகத்தில் மறுசீரமைப்புப் பணிகள், வியட்னாமில் மை சொன் எனப் பல்வேறு தொல்லியல் திட்டங்களில் இதுவரை இந்திய அகழாய்வுத் துறை ஈடுபட்டுள்ளது.
‘அனஸ்டைலோசிஸ்’ (anastylosis) என்ற நுட்பமான புதுப்பிப்புக் கொள்கை, அகழாய்வுத் துறையின் பணியை வழிநடத்துகிறது. சிதறியுள்ள தொல்லியல் சின்னங்களின் பாகங்களைச் சிறுகச் சேகரித்து, அவை முன்பிருந்த இடத்தில் கவனமாகப் பொருத்தப்படும் முறையாக இது உள்ளது.
கம்போடியாவின் ‘தா புரோம்’ ஆலயத்தில் மறுசீரமைப்புக்கான பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கற்களில் 90 விழுக்காடு அளவு அசல் கற்களாக உள்ளன. மற்ற முறைகளைக் கட்டிலும் அனஸ்டைலோசிஸ் முறை, நம்பகத்தன்மையையும் உண்மைத்தன்மையையும் உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பணி எளிதன்று. தொல்பொருள் பாதுகாப்பிற்குப் பல்வேறு துறைகளிலிருந்து நிபுணத்துவம் தேவைப்படுவதாகத் திரு சர்மா குறிப்பிட்டார். கட்டமைப்பு நிபுணர்கள், ஹைட்ராலஜிஸ்ட் எனப்படும் நீர்நிலை நிபுணர்கள், தாவரவியல் நிபுணர்கள் உள்ளிட்டோரின் திறன்கள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
தா புரோம் ஆலய வளாகத்தின் இடுக்குகளுக்கு இடையே மரங்களும் செடிகளும் வளர்ந்ததாகச் சுட்டிய திரு சர்மா, அந்தத் தாவரங்களையும் பாதுகாக்கும்படி யுனெஸ்கோ குழுவினர் தங்கள் தரப்பிடம் கேட்டதாகக் கூறினார்.
“தொல்லியல் கட்டடமும் பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் தாவரங்களுக்கும் கேடு ஏற்படக்கூடாது. இது மாறுபட்ட வேண்டுகோளாக இருந்தது. சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) போன்ற கல்வி நிலையங்களின் உதவியுடன், படைப்பாற்றல் தேவைபட்ட தீர்வு இதற்காக உருவாக்கப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.
இந்திய அகழாய்வுத் துறை, தனது வருங்கால செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிடுகிறது. மலாத் தீவுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் தற்போது செயல்படும் அந்த அமைப்புக்கு மங்கோலியாவிலிருந்தும் உஸ்பெகிஸ்தானிலிருந்தும் அழைப்பு வந்திருக்கிறது.
மேலும், இந்தோனீசியாவின் புகழ்பெற்ற பிரம்பணான் கோயில் வளாகத்திலும் இந்திய அகழாய்வுத் துறை செயல்படக்கூடும். இதன் தொடர்பில் தொழில்நுட்பக் குழு ஒன்று அங்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.