புதுடெல்லி: இந்தியாவும் சீனாவுக்கும் இடையே நேரடி பயணிகள் விமானச் சேவையை விரைவாக மீண்டும் தொடங்குவது குறித்து இரு நாடுகளும் விவாதித்ததாக இந்தியாவின் குடிமை விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு வியாழக்கிழமை (செப்டம்பர். 12) தெரிவித்துள்ளார்.
நேரடி பயணிகள் விமானச் சேவையை மீண்டும் தொடங்க சீனா, இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ஜூன் மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால், இருநாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சினைகள் காரணமாக இந்தியா இதுவரை உடன்படாமல் இருக்கிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு இமயமலை எல்லையில் இடம்பெற்ற ராணுவ மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் விரிசல் அதிகரித்தது. அத்தாக்குதலில் 20 இந்தியர்களும் நான்கு சீன வீரர்களும் கொல்லப்பட்டனர்.
அச்சம்பவத்தையடுத்து, இந்தியா, சீனாவின் முதலீடுகளுக்கு கிடுக்குப்பிடி போட்டது. நூற்றுக்கணக்கான பிரபலமான செயலிகளைத் தடை செய்தது, பயணிகள் விமானச் சேவைகளைத் துண்டித்தது. எனினும், இருநாடுகளுக்கும் இடையேயான நேரடி சரக்கு விமானச் சேவை இடம்பெற்று வருகிறது.
புதுடெல்லியில் நடைபெறும் குடிமை விமானப் போக்குவரத்துக்கான ஆசிய பசிபிக் அமைச்சர் நிலை மாநாட்டில், சீனாவின் குடிமை விமானச் சேவை நிர்வாகத்தின் தலைவரான சாங் ஷியோங்கைச் சந்தித்ததாக கிஞ்சராபு கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான குடிமை விமானப் போக்குவரத்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, குறிப்பாக திட்டமிடப்பட்ட பயணிகள் விமானச் சேவையை விரைவாக மீண்டும் தொடங்குவது பற்றி இருவரும் விவாதித்ததாக ராம் மோகன் நாயுடு எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டார்.

