மீண்டும் விமானச் சேவைகளைத் தொடங்க இந்தியா - சீனா பேச்சு

2 mins read
f62de1ed-927a-41e5-9ff2-5fe841d6854c
டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் பயணிகள். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: நேரடிப் பயணிகள் விமானச் சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பில் இந்தியாவும் சீனாவும் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன.

ஆயினும், அச்சேவையை எப்போதுமுதல் தொடங்குவது என்பதற்கான தேதி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்று இந்தியா திங்கட்கிழமை (ஏப்ரல் 14) தெரிவித்தது.

எல்லையில் இருதரப்பிற்கும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய மோதலையடுத்து, கடந்த ஐந்தாண்டுகளாக அவ்விரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமானது.

இதனிடையே, வணிக, பொருளியல் வேறுபாடுகளைக் களைவது தொடர்பில் பணியாற்ற அவ்விரு நாடுகளும் கடந்த ஜனவரியில் ஒப்புக்கொண்டன. அது, இரு நாடுகளின் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், “இந்திய, சீனப் பொது விமானப் போக்குவரத்து அமைச்சுகளுக்கு இடையே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது,” என்று இந்தியப் பொது விமானப் போக்குவரத்துத் துறையின் செயலாளர் வும்லுன்மங் வுவல்னம், புதுடெல்லியில் நடந்த இந்திய வணிகச் சபையின் கருத்தரங்கில் கலந்துகொண்டபோது தெரிவித்தார்.

அதே நேரத்தில், தீர்க்க வேண்டிய இன்னும் சில பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2020ஆம் ஆண்டு எல்லையிலுள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் மூண்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேரும் சீன ராணுவத்தினர் நால்வரும் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, தன் நாட்டில் முதலிடும் சீன நிறுவனங்கள்மீது இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது; நூற்றுக்கணக்கான கைப்பேசிச் செயலிகளுக்குத் தடைவிதித்தது. நேரடிச் சரக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தாலும் பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சென்ற அக்டோபரில் எல்லையில் படைகளை விலக்கிக்கொள்ள இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. அதே மாதத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் ரஷ்யாவில் சந்தித்துப் பேசினர்.

குறிப்புச் சொற்கள்