புதுடெல்லி: அமெரிக்காவின் திறன்பேசி விநியோகத் தொடரில் முக்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
சீனாவிலிருந்து இதற்குமுன் இறக்குமதியான கிட்டத்தட்ட 40 விழுக்காட்டுத் திறன்பேசிகள் இப்போது இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அமெரிக்காவின் ‘மெக்கின்சி அண்ட் கம்பனி’ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
அமெரிக்கா அதன் தேவைகளைப் பூர்த்திசெய்ய வெவ்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதிகளைப் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அறிக்கை சுட்டியது.
இதற்குமுன், கிட்டத்தட்ட $80 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளைச் சீனாவிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்தது.
சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் மூன்றில் இரண்டு பங்குப் பொருள்களை இந்தியாவிடமிருந்தும் ஆசியான் நாடுகளிடமிருந்தும் அமெரிக்கா இறக்குமதி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவிடமிருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு இறக்குமதி செய்த திறன்பேசிகளின் மதிப்பு ஏறக்குறைய $15 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது என்றும் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்த திறன்பேசிகளின் மதிப்பு $18 பில்லியன் டாலர் வரை குறைந்துள்ளது என்றும் நிபுணர்கள் கூறினர்.
அமெரிக்கா, கடந்த ஆண்டு சீனப் பொருள்கள்மீது வரிகளை அதிகரித்ததாலும் வர்த்தகத் தடைகளை விதித்ததாலும் இந்தியாவின் இறக்குமதி கூடியது.

