புதுடெல்லி: ஒலியைவிட அதிவேகமாகச் செல்லும் ‘சூப்பர்சோனிக்’ பிரம்மோஸ் ஏவுகணைகளை பிலிப்பீன்சுக்கு விற்பனை செய்வதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக இத்துறை சார்ந்த நேரடித் தகவலறிந்த மூன்று வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளன.
அதனால், கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் கீழான ஏவுகணை விநியோகத்தை இந்தியா நிறைவு செய்யும் தறுவாயில் உள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன.
ஏறத்தாழ US$ 700 மில்லியன் முதல் US$800 மில்லியன் வரை மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம், பிலிப்பீன்ஸ் ஐந்து பிரம்மோஸ் அமைப்புகளையும் மொத்தமாக ஏறத்தாழ 60 ஏவுகணைகளையும் வாங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
“பிரம்மோசின் ஐந்து அமைப்புகளைக் கொள்முதல் செய்ய மணிலா மீண்டும் ஆர்வம் காட்டியுள்ளது.
“மேலும், தற்போது அவர்கள் இந்தியாவை மிகவும் நம்பகமான கூட்டாளியாகக் கருதுகின்றனர்,” என்று ஒருதரப்பு தெரிவித்தது.
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், தனது ராணுவத்தை நவீனமயமாக்கி, கடலோரப் பாதுகாப்பை பிலிப்பீன்ஸ் வலுப்படுத்தி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் இந்தியா மேற்கொள்ளவிருக்கும் புதிய ஒப்பந்தமானது, கடற்படைப் பயன்பாட்டிற்காக முன்னர் வழங்கப்பட்ட US$375 மில்லியன் மதிப்பிலான பிரம்மோஸ் விற்பனை ஒப்பந்தத்தைவிடப் பல மடங்கு அதிகம்.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்த பிரம்மோஸ், உலகின் அதிவேக ஏவுகணைகளில் ஒன்றாகும். அதனை தரை, கடல் மற்றும் வான் தளங்களில் இருந்து ஏவ முடியும்.
கூடுதல் பிரம்மோஸ் ஏவுகணைகளைப் பெற அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் விருப்பம் தெரிவித்துள்ளதாக பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஆர்செனியோ ஆண்டோலாங் ராய்ட்டர்சிடம் கூறினார். இருப்பினும், கூடுதல் விவரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை (நவம்பர் 4) டெல்லியில் நடைபெற்ற தற்காப்பு கலந்துரையாடலில் பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சர் கில்பர்டோ தியோடோரோ காணொளி வாயிலாகக் கலந்துகொண்டு பேசினார்.
கூடுதல் பிரம்மோஸ் ஏவுகணைத் தொகுதிகளைப் பெற பிலிப்பீன்ஸ் விரும்புவதாகவும் அவற்றை பிலிப்பீன்சின் தட்பவெப்ப மற்றும் புவியியல் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான விருப்பப் பட்டியல் ஒன்றை இந்திய அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
