தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் 5 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் டெஸ்லா

2 mins read
faec0278-a456-4c12-803c-cd369b27515d
இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிடுகிறது டெஸ்லா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இலோன் மஸ்க் தலைமையிலான பிரபல ‘டெஸ்லா’ நிறுவனம் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தித் துறையில் அடியெடுத்து வைக்க இருப்பதாகவும் அந்நிறுவனம் இந்திய சந்தையில் ஐந்து பில்லியன் டாலர் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் காட்சி - விற்பனையகங்கள் புதுடெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் அமைய உள்ளதாகக் கூறப்படுகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் மின்சார கார்களின் விலை ஆகக் குறைவாக ரூ.21 லட்சமாக நிர்ணயிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே கார் உற்பத்தி ஆலையை அமைக்கவும் திட்டமிட்டுள்ள அந்நிறுவனம், பெர்லின் நகரில் உள்ள தனது உற்பத்தி மையத்திலிருந்து இந்தியாவுக்கு தனது தயாரிப்புகளை நேரடியாக இறக்குமதி செய்வதையும் தனது விருப்பமாக கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெஸ்லாவின் வருகை இந்திய மோட்டார் வாகனச் சந்தையில் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு போட்டியாக அமைய வாய்ப்பு உள்ளளதாகவும் கருதப்படுகிறது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனது விற்பனைக் கூடங்களை அமைக்க ஏற்ற இடங்களை தேடி வந்தது டெஸ்லா. இந்நிலையில், புதுடெல்லி, மும்பையில் 5,000 அடி சதுர பரப்பில் டெஸ்லாவின் விற்பனைக்கூடங்கள் அமைய உள்ளதாக ராய்டர்ஸ் கூறியுள்ளது.

இவற்றைத் திறப்பதற்கான அதிகாரபூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை என்றும் அதன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மோட்டார் வாகனச் சந்தையில் ஒரு நிறுவனம் 3 முதல் 55 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யலாம்.

அந்த வகையில் டெஸ்லா நிறுவனம் 5 பில்லியன் டாலர் முதலீடுக்கு தயாராகி வருவதாகவும் மகாராஷ்டிரா அல்லது குஜராத் மாநிலத்தில் தனது ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவின் ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து செயல்படவும் டெஸ்லா விரும்புவதாக ஒரு தகவல் கூறுகிறது.

இதற்கிடையே, தங்களுடைய டெஸ்லா நிறுவனம் சார்பில் இந்தியாவில் கார் தொழிற்சாலையை அமைத்தால் அது அமெரிக்காவுக்கு இழைக்கப்படும் அநீதி என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்