புதுடெல்லி: அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளுடன் ‘பசிபிக் ஏஞ்சல் 25’ல் இந்தியாவும் இணைந்துள்ளது. இது, இலங்கையின் அனைத்துலக விமான நிலையமான கட்டுநாயக்க விமானத் தளத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கப்பட்ட பேரிடர் மீட்பு, மனிதாபிமான ஒத்துழைப்பு குறித்த மிகப்பெரிய பலதரப்புப் பயிற்சி ஆகும்.
செப்டம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறும் ஐந்து நாள் பயிற்சி, கிட்டத்தட்ட 90 அமெரிக்க, 120 இலங்கை ஆகாயப்படை வீரர்களை ஒன்றிணைக்கிறது. ஆஸ்திரேலியா, பங்ளாதேஷ், இந்தியா, ஜப்பான், மாலத்தீவுகளின் படைகள் பார்வையாளர்களாகப் பங்கேற்கின்றன. இப்பயிற்சி தேடல், மீட்பு, மருத்துவ ஆயத்த நிலை, விமானப் பாதுகாப்பு, பொறியியல் ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
“பசிபிக் ஏஞ்சல் 25 இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறும் மிகப்பெரிய பலதரப்புப் பயிற்சி,” என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் கூறினார்.
“இது, பேரிடர் முதல் மனிதாபிமான நெருக்கடிகள்வரை நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட தயாராக இருப்பதைக் காட்டுகிறது,” என்றார் அவர்.