எதிர்காலத் தொழில்நுட்பங்களில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும்: மோடி

எதிர்காலத் தொழில்நுட்பங்களில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும்: மோடி

1 of 2
கோப்புப் படம்: ஃபோர்ப்ஸ்
படம்: தி எக்கானமிக் டைம்ஸ்

28 Oct 2026 - 6:57 pm

1 mins read

புதுடெல்லி: புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகளாவிய தீர்வுகளுக்கான மையமாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ‘வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளுக்கான மாநாட்டில்’ உரையாற்றிய அவர், ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கு, வலுவான அறிவியல் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், புதுமைப் படைப்புகளின் அடித்தளத்திலேயே கட்டியெழுப்பப்படும் என்றார்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களின் காலத்தில், வழக்கமான பணிகளை ஏஐ விரைவாகச் செய்து முடித்தாலும் முடிவுகளின் உண்மைத்தன்மையை பரிசோதிக்கும் பொறுப்பு அறிவியலாளர்களிடமே உள்ளது என்றார் அவர்.

ஆராய்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள், புதுத் தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம், மாதிரி வடிவம் அல்லது புதிய தயாரிப்பை உருவாக்குவதை இலக்காகக்கொண்டு செயல்பட வேண்டும் என்று திரு மோடி கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் வளர்ந்து வரும் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய அணுசக்தி முக்கியமானது என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் சுயசார்புத் தொழில்நுட்பத்தில் தயாரான 500 மெகாவாட் ‘முன்னோடி வேகப்பெருக்கி அணுவுலை’ அண்மையில் முதன்முதலாகச் செயல்படத் தொடங்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நிதி, தேசியப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எழும் சவால்களை எதிர்கொள்ள ஏஐ, குவாண்டம் சார்ந்த பாதுகாப்புத் தீர்வுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்