தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவுக்கு கவலை இல்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர்

2 mins read
4c1f851e-c8f6-4edd-bd66-9ab5c3a28964
சஞ்சய் மல்ஹோத்ரா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: அமெரிக்கா விதித்துள்ள 50% வரிகள் காரணமாக இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படாது என்றும் வரிவிதிப்பு கவலை அளிக்கும் விஷயமல்ல என்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

வாஷிங்டன்னில் நடைபெற்ற உலக வங்கி நிகழ்ச்சியில் பேசிய அவர், உள்நாட்டு ஆதரவைப் பெற்றுள்ள இந்தியப் பொருளியல், அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்படக்கூடிய எதிர்மறைத் தாக்கத்தைக் கட்டுப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவும் இந்தியாவும் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தற்போது இந்தியக் குழுவானது, பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டன்னில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியக் குழுவினருடன் தாம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அதிபர் டிரம்ப் நிர்வாகம் இந்தியப் பொருள்களுக்கான வரிகளை 50% உயர்த்தியுள்ள போதிலும், நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 45.82 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த மதிப்பானது, 40.42 பில்லியன் டாலராக இருந்தது,” என்றார் சஞ்சய் மல்ஹோத்ரா.

உள்நாட்டுப் பொருளியலைச் சார்ந்துள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அமெரிக்காவின் செயல்பாட்டால் அனைத்துலக அளவில் வர்த்தகம் பாதிப்படைந்து பல்வேறு நாடுகளின் பொருளியல் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பிற நாடுகளைப் போல் அதிகமாக மதிப்பிழக்கவில்லை என்றும் திரு சஞ்சய் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார்.

“கொவிட்-19, ரஷ்யா - உக்ரேன் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விரைவாக மீண்டு வந்துள்ளோம். பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

“பண வீக்கமானது, 8%ல் இருந்து 1.5%ஆக குறைந்திருப்பது, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத ஒன்று. மத்திய அரசும் நிதித்துறையும் ஒருங்கிணைந்து செயல்படுவதே இந்த வளர்ச்சிக்குக் காரணம்,” என்றார் திரு சஞ்சய் மல்ஹோத்ரா.

குறிப்புச் சொற்கள்