$1.28 டிரில்லியன் ஏற்றுமதி இலக்கை எட்டும் பாதையில் இந்தியா: பியூ‌ஷ் கோயல்

$1.28 டிரில்லியன் ஏற்றுமதி இலக்கை எட்டும் பாதையில் இந்தியா: பியூ‌ஷ் கோயல்

படம்: பிடிஐ

11 Nov 2026 - 2:44 pm

2 mins read

புதுடெல்லி: சரக்கு, சேவை ஏற்றுமதி இலக்கான $1.28 டிரில்லியனை (ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்) திட்டமிட்டபடி நடப்பு நிதியாண்டில் இந்தியா எட்டும் என அந்நாட்டு வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) தெரிவித்தார்.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அந்நாட்டின் ஏற்றுமதி கிட்டத்தட்ட $615.25 பில்லியனை (480 பில்லியன் அமெரிக்க டாலர்) எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அது நிர்ணயிக்கப்பட்ட ஒட்டுமொத்த ஏற்றுமதி இலக்கில் 48 விழுக்காடு ஆகும். ‘பாரத் மொபிலிட்டி குளோபல்’ கண்காட்சி தொடர்பான முன்னோட்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், அக்டோபர் மாத வர்த்தகப் புள்ளிவிவரங்கள் மிகவும் உற்சாகமளிப்பதாகக் கூறினார்.

அத்தரவுகளை வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் நவம்பர் 13ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

பாரத் மண்டபம், யசோபூமி ஆகிய இடங்களில் 2027 பிப்ரவரி தொடக்கத்தில் நடைபெறவுள்ள அக்கண்காட்சியில் 1,750க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடையற்ற வர்த்தக உடன்பாடுகள் மூலமாக இந்தியப் பொருள்களுக்கு உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 75 விழுக்காடு சந்தை வாய்ப்பு கிட்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, இந்தியத் தொழில்துறையினர் உலகச் சந்தைகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.

“ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் வாகன உற்பத்தித் துறைக்கு மாபெரும் வாய்ப்புகளை வழங்கும். ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியச் சந்தையைச் சோதித்துப் பார்த்துவிட்டு, பின்னர் உலக நாடுகளுக்காக இங்கேயே வாகனங்களைத் தயாரிக்கும் சூழ்நிலை உருவாகும். இதனால் உற்பத்தித்திறன் பெருகும்,” என்றார் திரு பியூஷ் கோயல்.

மாருதி சுஸுகி நிறுவனம் 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து வாகனங்களை ஏற்றுமதி செய்து வருவதைச் சுட்டிய அமைச்சர், உலகச் சந்தையைக் குறிவைத்து உற்பத்தியை விரிவுபடுத்தினால், விலைப் போட்டியில் இந்தியாவை எவராலும் வெல்ல முடியாது எனப் பெருமிதத்துடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்