புதுடெல்லி: நீரிழிவு நோய் பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஒன்பது கோடி நீரிழிவு நோயாளிகள் இருப்பது ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
பிரிட்டனில் வெளியாகும் ‘தி லான்செட் டயபட்டீஸ் அண்ட் எண்டோகிரைனாலஜி’ என்ற மருத்துவ இதழில் அண்மையில் ஓர் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் அனைத்துலக நீரிழிவு நோய்க் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. அதனுடன் சென்னையில் உள்ள இந்திய நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனம், டாக்டர் ராமச்சந்திரன் நீரிழிவு நோய் மருத்துவமனை ஆகியவற்றின் மருத்துவர்களும் நிபுணர்களும் நீரிழிவு நோய் தொடர்பாக உலக அளவில் ஆய்வை மேற்கொண்டனர்.
அப்போது 2024-25 காலகட்டத்தில் பதிவான தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மொத்தம் 215 நாடுகளின் தரவுகள் பெறப்பட்டு 246 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. பின்னர் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டது.
அதன்படி, நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளா நாடுகளின் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கடந்த 2024ல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.8 கோடியாக உள்ளது.
இந்தியாவில் ஒன்பது கோடிப் பேர் நீரிழிவால் அவதிப்படும் நிலையில் அமெரிக்காவில் 3.9 கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில்தான் நீரிழிவு பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும் 2050க்குள் அமெரிக்காவை பாகிஸ்தான் விஞ்சிவிடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2024ஆம் ஆண்டில் 11 விழுக்காட்டுக்கும் மேல், அதாவது ஏறக்குறைய 59 கோடிப் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2050ல் இந்த விகிதம் 13%ஆக அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
2024ல் உலகில் ஒன்பது பேரில் ஒருவருக்கேனும் நீரிழிவு பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள மூத்தோரின் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்துவிட்ட நிலையில், எதிர்வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 90 கோடியாக உயரும் என லண்டன் மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

