புதுடெல்லி: ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அரிசிக்கான குறைந்தபட்ச விலையை செப்டம்பர் 13ஆம் தேதியன்று இந்தியா அகற்றியது.
வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பரிதவிக்கும் விவசாயிகளுக்கு உதவவும் வெளிநாடுகளில் பாஸ்மதி அரிசி விற்பனையை அதிகரிக்கவும் இந்திய அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
2023ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அரிசிக்கான குறைந்தபட்ச விலையை இந்தியா அறிவித்தது.
அதன்படி, குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக மெட்ரிக் டன்னுக்கு 1,200 அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டது.
இது பிறகு டன்னுக்கு 950 அமெரிக்க டாலராகக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், பாஸ்மதி அரிசியின் அளவு அதிகரித்ததை அடுத்து, அவை கிடங்குகளில் தேங்கிவிடாமல் இருக்க ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அரிசிக்கான குறைந்தபட்ச விலையைக் குறைக்க அல்லது அகற்றும்படி இந்திய அரசாங்கத்திடம் வர்த்தகர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும், பயிரிடப்பட்டுள்ள பாஸ்மதி நெல்கள் இன்னும் ஒரு மாதத்துக்குள் அறுவடை செய்யப்படும் என்றும் இதன் விளைவாக இருப்பில் உள்ள பாஸ்மதி அரிசியின் அளவு மேலும் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்மதி அரிசி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே விளைகிறது.
தொடர்புடைய செய்திகள்
உயர்தர பாஸ்மதி அரிசியின் விற்பனையை அதிகரிக்க இருநாடுகளும் முயன்று வருகின்றன.