புதுடெல்லி: இந்தியா, உலகளவில் புதிய தூதரகங்களைத் திறக்கும் பணிகளை துரிதப்படுத்திவருகிறது. பெருகிவரும் இந்திய வம்சாவளியினருக்குச் சேவையாற்றவும் உலகில் இந்தியாவின் தாக்கத்தை அதிகரிக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த ஏழு மாதங்களில் இந்தியா, பல உலக நாடுகளில் தனது தூதரகத்தைத் திறந்துள்ளது. ஐரோப்பாவிலிருந்து ஆசியா, லத்தீன் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் அவற்றில் அடங்கும்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வட அயர்லாந்துத் தலைநகர் பெல்ஃபாஸ்ட்டில் இந்தியத் தூதரகத்தை இம்மாதம் எட்டாம் தேதி திறந்துவைத்தார். வட அயர்லாந்து, பிரிட்டனைச் சேர்ந்தது.
உலகளவில் தங்களின் அரசதந்திர உறவுகளை மீண்டும் விரிவுபடுத்தும் முயற்சியில் இந்தியா இறங்கியிருக்கிறது. அதிகரித்துவரும் இந்திய வம்சாவளியினருக்கு ஆதரவளிப்பதோடு வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தி அவற்றை மேம்படுத்துவதும் இந்தியாவின் இலக்காகும்.
“மறுபடியும் ஆட்சியைப் பிடித்த பிறகு விரைவிலேயே தூதரகங்களை அமைப்பது சரியான செயலாகும்,” என்று பெல்ஃபாஸ்ட் தூதரகத்தின் திறப்பு விழாவில் ஜெய்சங்கர் கூறினார்.
“பெல்ஃபாஸ்ட்டில் தூதரகம் திறந்தது பொருளியல் ரீதியாகப் பலனளிக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம். அதேவேளை, அது இந்திய சமூகத்துக்குச் சேவையாற்றும் பொறுப்பை முக்கியமாகக் கொண்டிருக்கவேண்டும் என்பது எங்கள் எண்ணம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஏழு மாதங்களில் பெல்ஃபாஸ்ட் மட்டுமின்றி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன், பிரான்சின் மார்சே, பிரிட்டனின் மான்செஸ்டர், நியூசிலாந்தின் ஆக்லாந்து, பொலிவியாவின் லா பாஸ், திமோர் லெஸ்டேயின் டிலி ஆகிய நகரங்களிலும் இந்தியா தூதரகங்களைத் திறந்துள்ளது.
சென்ற ஆண்டு ஜூன் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தார்.
தொடர்புடைய செய்திகள்
உலக மேடையில் இந்தியாவின் விருப்பங்களையும் இலக்குகளையும் பூர்த்திசெய்யும் நோக்கில் தூதரகங்கள், அரசதந்திரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் (பாஜக) தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

