தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா விரைவில் வரிகளைக் கணிசமாகக் குறைக்கும்: டிரம்ப்

2 mins read
25f86ced-03d6-42a9-bbbb-c31b7e047c74
இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான தங்களுடைய வரிவிதிப்புகளைக் கைவிடப் போகின்றன என்கிறார் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியா மிக விரைவில் அமெரிக்கப் பொருள்கள் மீதான வரிகளை கணிசமாகக் குறைக்கப் போவதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை தனது ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய அவர், அனைத்து நாடுகளாலும் அமெரிக்கா ஏமாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

“இந்தியா அதன் வரிகளை கணிசமாகக் குறைக்கப் போகிறது என்று கேள்விப்பட்டேன். பல நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான தங்களுடைய வரிவிதிப்புகளைக் கைவிடப் போகின்றன,” என்றார் அதிபர் டிரம்ப்.

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையானது அதன் நட்பு நாடுகளை சீனாவுக்கு நெருக்கமாகத் தள்ளக்கூடும் என்று எழுந்துள்ள கவலைகளை முற்றிலுமாக நிராகரித்த அமெரிக்க அதிபர், ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் கார்கள் மீதான வரிகளை 2.5% அளவு குறைத்திருப்பது அமெரிக்காவுக்கு கிடைத்துள்ள வெற்றிக்கான சான்று என்றார்.

இந்தியா தற்போது அமெரிக்க விவசாயப் பொருள்களுக்கு 100 விழுக்காடு வரி விதிப்பதாகவும் மற்ற நாடுகளும்கூட இதேபோல் அதிக வரிகளை விதிக்கின்றன என்றும் வெள்ளை மாளிகையின் ஊடகத் தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க பால் பொருட்களுக்கு 50% வரி வசூலிக்கிறது என்றும் ஜப்பான் அமெரிக்க அரிசிக்கு 700% வரி விதிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அமெரிக்க பால் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் 50 விழுக்காடும், அமெரிக்க அரிசிக்கு ஜப்பானில் 700% வரி விதிப்பதும் அதிகம் என்றார் அவர்.

இது அமெரிக்கப் பொருள்களை இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறது, இதனால் பல தலைமுறைகளாக அமெரிக்கர்கள் வணிகத்தில் இருந்தும் பணியில் இருந்தும் விலகி நிற்கிறார்கள்,” என்றார் கரோலின் லீவிட்.

அமெரிக்க அதிபர் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தி அமெரிக்க மக்களுக்குச் சரியானதைச் செய்ய வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்