மும்பை: இந்தியா, சீனா இடையேயான உறவுகள் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக இந்தியாவுக்கான சீனத் துணைத் தூதர் கின் ஜியே கூறியுள்ளார்.
மிக விரைவில் புதுடெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்ச நிலை மாநாடு, இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான நல்லதொரு வாய்ப்பை வழங்கும் என மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்ச நிலை மாநாடு நடப்பாண்டு டெல்லியில் நடைபெற உள்ளது. மேலும், அடுத்த ஆண்டு சீனாவிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடுகள் இருதரப்பு தொடர்பையும் நட்பையும் ஆழப்படுத்தும் என்றும் இருநாட்டு குடிமக்களின் நலனுக்காகவும் ஒட்டுமொத்த உலகின் நிலைத்தன்மைக்காகவும் முன்னேற்றம் காணவும் சிறப்பான வாய்ப்புகளை வழங்கும் என்றும் துணைத்தூதர் கூறினார்.
“அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைந்து பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்,” என அந்த மூத்த தூதரக அதிகாரி வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், சீனத் தரப்பிலிருந்து இத்தகைய கருத்துகள் வெளிவந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த மார்ச் மாதம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பை நினைவு கூர்ந்தார் துணைத் தூதர் கின் ஜியே.
தொடர்புடைய செய்திகள்
“இருதரப்பு உறவின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, நமது தலைவர்களின் தலைமையில் இந்திய, சீன உறவுகளில் சரியான திசையில் முன்னேறி வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் இருமுறை சந்தித்துள்ளனர்,” எனத் துணைத் தூதர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தியா, சீனா இடையே தூதரக உறவுகள் தொடங்கி 76 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து இரு நாடுகளையும் பிரிக்க இயலாது என சீன அரசு தெரிவித்துள்ளது.

