புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்துள்ள 25 விழுக்காடு விரி விதிப்பு, இந்திய ஆடை, ஜவுளித் தொழிலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆடை தயாரிப்புத் துறை, குறிப்பிடத்தக்க சரிவை சந்திக்கும். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் 6.87 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி (ரூ.46,718 கோடி) மதிப்புள்ள ஆடைகள் ஏற்றுமதியாகிறது.
இந்திய மக்கள் தொகையில் 35 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் துறையாக இத்துறை விளங்குகிறது.
இதில் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில் கிட்டத்தட்ட பாதி தமிழ்நாட்டில் உள்ளன. நாட்டிலேயே ஆயத்த ஆடை உற்பத்தியில் முதலிடத்திலும், ஜவுளி உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் தமிழகம் உள்ளது. ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழிலில் ஈடுபடும் ஊழியர்களில் 19 விழுக்காட்டினர் தமிழகத்தில் உள்ளனர்.
திருப்பூரில் மட்டும் 1.8 லட்சம் பேர் ஆடைத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் 25 விழுக்காடு வரி விதிப்பு தமிழகத்தின் ஆடைத் தயாரிப்புத் தொழில்துறையை நேரடியாகப் பாதிக்கும். ஏற்கெனவே நூல் விலை உயர்வு, செலவினங்கள் அதிகரிப்பு எனப் பல சவால்களைச் சந்தித்துவரும் இந்தத் துறையை அமெரிக்க வரி, பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கிக் கொண்டு செல்லும் அபாயத்தில் உள்ளது.
2024-25ஆம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து ஆடை ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் 33-34% அமெரிக்காவுக்குச் செல்கிறது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.46,718 கோடி மதிப்புக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் ஆடை ஏற்றுமதியில் இந்தியா 6.1 விழுக்காட்டைக் கொண்டிருக்கிறது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு, ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கான புதிய வரி விகிதம் 25 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, 20% என்ற குறைந்த வரியைக் கொண்டிருக்கும், இந்தியாவின் முக்கியப் போட்டியாளர்களாக விளங்கும் பங்ளாதேஷ், வியட்னாம் போன்ற நாடுகளுக்கு சாதகமாக மாறியிருக்கிறது. இந்தோனீசியா, கம்போடியா நாடுகள் 19% வரியைக் கொண்டுள்ளன.
இந்திய ஆடைத் தயாரிப்பு, ஜவுளித் துறைக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என்று தொழில்துறையினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அனைத்துலக அளவில் ஆடைத் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்கள் குறைந்த விலையில் கிடைப்பதை எளிதாக்குவது பேருதவியாக இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், வரி விதிப்பு, அபராதம் என்ற நிலைமைகள் மாறும் என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு மன்றம், இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்புகள் ஆகிணவை நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனவை