வூகான்: இந்தியாவைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர் டாக்டர் சையது முகம்மது கவுஸ் சீனாவிலிருந்தபடி இந்தியாவின் ஹைதராபாத்தில் இருந்த நோயாளி ஒருவருக்கு இயந்திர மனிதனின் துணையுடன் சிறுநீர்க்குழாய் மறுஇணைப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துமுடித்துள்ளார்.
இந்தியா - சீனா இடையிலான எல்லை கடந்த தொலைநிலை மருத்துவத்திலும் எந்திரனியல் மருத்துவ ஒத்துழைப்பிலும் ஏற்பட்டுள்ள பெரிய முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.
சீனாவில் உருவாக்கப்பட்ட எந்திரனியல் அமைப்புகள் மற்றும் அதிவேக 5ஜி இணையத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட 3,000 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த நோயாளிக்கு 90 நிமிடங்களில் இந்த அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டது.
வூகானில் உள்ள டோங்ஜி மருத்துவமனை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவக் குழுவினர் இணைந்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளதாக ‘சைனா டெய்லி’ ஊடகச் செய்தி தெரிவித்தது.
அறுவை சிகிச்சைக்கு முன்பாக, மருத்துவர்கள் இணையம் வழியாக நோயாளியின் மருத்துவ ஆவணங்களை ஆய்வுசெய்து, இயந்திர மனிதக் கைகளின் இயக்கப் பாதையை வடிவமைத்தனர்.
ஹைதராபாத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் நோயாளிக்கு மயக்க மருந்து அளித்து, நுண்ணிய அறுவை சிகிச்சைத் துணைக்கருவிகளுடன் கூடிய முப்பரிமாணப் படக்கருவிகளை இணைத்தனர்.
வூகானில் இருந்தபடி மருத்துவர் கவுஸ், முப்பரிமாணக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே இயந்திர மனிதக் கைகளை இயக்கினார்.
அதிவேக 5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவரின் கட்டளைகள் வெறும் 200 மில்லிநொடிகளுக்குள் இயந்திர மனிதனின் கைகளுக்குக் கடத்தப்பட்டு, அவை நோயாளியின் உடலில் துல்லியமாகச் செயல்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் உதவுவதற்காக ஹைதராபாத் மருத்துவக் குழுவினர் தயார்நிலையில் இருந்தனர்.
அனைத்துலகக் கல்லீரல், கணைய, பித்த நாள மருத்துவச் சங்கத்தினுடைய சீனப் பிரிவின் 10வது மாநாட்டின்போது இடம்பெற்ற 26 செயல்முறை விளக்கங்களில் இதுவும் ஒன்று.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ), 5ஜி போன்ற தொழில்நுட்பங்கள் மருத்துவத் துறையோடு ஆழமாக ஒன்றிணைந்து வருவதை இந்த எல்லை கடந்த மருத்துவச் சாதனை உறுதிப்படுத்தியுள்ளது.

