தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியப் பொருளியல் ஈராண்டு காணாத சரிவு

2 mins read
79981b1a-1bfe-4ab8-a8e7-30cbedc6b2f5
2023ஆம் ஆண்டு 8.1 விழுக்காடு வளர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி இவ்வாண்டு 5.4 விழுக்காட்டுக்குச் சரிந்தது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 5.4 விழுக்காடாகக் குறைந்து உள்ளது. ஏழு காலாண்டுகளில் இதுவே ஆகக் குறைவான வளர்ச்சி.

ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியே அந்நாட்டின் பொருளியல் வளர்ச்சி.

இதற்கு முன்னர், 2022 -23 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2022 அக்டோபர் - டிசம்பர்) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.3 விழுக்காடாக இருந்ததே குறைவான வளர்ச்சியாகத் தொடர்ந்தது.

கடந்த ஆண்டின் இதே ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.1 விழுக்காடு என்னும் சிறப்பான வளர்ச்சியில் இருந்து 2.7 விழுக்காடு சரிந்துள்ளது.

அதேபோல, இவ்வாண்டின் முதலாம் காலாண்டான ஏப்ரல்-ஜூனில் ஜிடிபி 6.7 விழுக்காடாக இருந்தது.

தற்போதைய வீழ்ச்சிக்கு உற்பத்தித் துறை மற்றும் சுங்கத் துறைகளின் மோசமான செயல்திறனே முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

உற்பத்தித்துறை வளர்ச்சி 2.2 விழுக்காட்டுக்கு சுருங்கியது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் அதன் வளர்ச்சி 14.3 விழுக்காடாக இருந்தது.

சுரங்கத் துறைகளின் வளர்ச்சியில்தான் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

கடந்த ஆண்டு 11.1 விழுக்காடாக இருந்த அது 0.01 என்று படுமோசமாக வீழ்ந்தது. இது கிட்டத்தட்ட அந்த்த் துறைகளின் தேக்கத்தைக் குறிக்கிறது.

கட்டுமானத்துறையும் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 13.6 விழுக்காட்டில் இருந்து 7.7 விழுக்காடாகக் குறைந்து விட்டது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவடைந்தபோதிலும் சீனாவின் 4.6 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் வேகமாக வளர்ந்து வரும் பொருளியல் நாடாக இந்தியா தொடர்ந்து நீடிப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏறக்குறைய ஈராண்டுகளில் இல்லாத பொருளியல் சரிவு ஏற்பட்டுள்ளதை எதிர்த்தரப்பு காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

அக்கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிரதமர் மோடி மற்றும் அவரைப் போற்றுபவர்களால் ஊதிப் பெருக்கப்பட்ட ஆரவாரத்தைவிட யதார்த்தம் வெகுவாக விலகியிருக்கிறது என்பதை இரண்டாவது காலாண்டின் ஜிடிபி காட்டுகிறது,” என்று கூறியுள்ளார்.

“உற்பத்தித் துறையின் வளர்ச்சி அதிர்ச்சி அளிக்கும் வகையில் 2.2 விழுக்காடாகவும் ஏற்றுமதி வளர்ச்சி 2.8 விழுக்காடாகவும் குறைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்