புதுடெல்லி: இந்தியப் பொருள்கள்மீது அமெரிக்கா 50 விழுக்காடு வரி விதிக்க அமெரிக்கா முடிவுசெய்ததை அடுத்து, அந்நாட்டிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 37.5 விழுக்காடு குறைந்துவிட்டதாக ‘ஜிடிஆர்ஐ’ எனப்படும் அனைத்துலக வணிக ஆய்வுத் திட்டம் மதிப்பிட்டுள்ளது.
இவ்வாண்டு மே மாதத்தில் 8.8 பில்லியன் டாலராக (S$11.4 பில்லியன்) இருந்த அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி, செப்டம்பர் மாதத்தில் 5.5 பில்லியன் டாலராகக் குறைந்துவிட்டதை ஜிடிஆர்ஐ அறிக்கை காட்டுகிறது.
இந்தியப் பொருள்களுக்கான 50 விழுக்காடு வரிவிதிப்பு செப்டம்பர் மாதத்தில்தான் நடப்பிற்கு வந்தது. அம்மாதத்தில் மட்டும் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 20.3 விழுக்காடு குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நான்கு மாதங்களாக அமெரிக்காவிற்கான ஏற்றுமதி சரிவுகண்டுள்ளபோதும், செப்டம்பரில்தான் ஆக அதிகச் சரிவு பதிவானது.
கடைசியாக 2025 மே மாதத்தில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 4.8 விழுக்காடு உயர்வுகண்டது.
அமெரிக்காவின் வரிவிதிப்பால் அந்நாட்டிற்கான இந்தியாவின் ஏற்றுமதி கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
ஆடைகள், மணிக்கற்கள், நகைகள், பொறியியல் தயாரிப்புகள், வேதிப்பொருள்கள் ஆகிய துறைகளே ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிடிஆர்ஐ அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் இறக்குமதி வரிவிதிப்பு அந்நாட்டிற்கான இந்தியாவின் ஏற்றுமதிமீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்தியாவின் வணிக நலன்களைப் பேணிக் காப்பதற்கு கொள்கை மறுஆய்வு அவசியம் என்பதைக் காட்டுகிறது என்றும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.