பாதுகாப்புச் செயலியுடன் திறன்பேசிகளைத் தயாரிக்க அரசு உத்தரவு

2 mins read
1f4ed8aa-f55a-4311-b59d-5c368a978eb1
திறன்பேசிகளில் இணையப் பாதுகாப்புச் செயலியான ‘சஞ்சார் சாத்தி’ (Sanchar Saathi) கட்டாயம் இடம் பெறவேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவில் மின்னிலக்கக் கைது, இணையக் குற்றங்கள் ஆகியவற்றின்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளில் பெரும்பாலும் பெண்கள், மூத்தோர்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இக்குற்றங்களைத் தடுக்க இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பெரிய அளவில் பயனளிக்கவில்லை.

மத்தியப் புலன் விசாரணை, காவல்துறை, அமலாக்கப்பிரிவு போன்ற அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகளைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து மோசடிக் கும்பல்கள் பொதுமக்களிடமிருந்து பணத்தைப் பறித்து வருகிறது.

இதையடுத்து, திறன்பேசிகளில் இணையப் பாதுகாப்புச் செயலியான ‘சஞ்சார் சாத்தி’ (Sanchar Saathi) கட்டாயம் இடம் பெறவேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை வரும் 90 நாள்களுக்குள் அமல்படுத்தவேண்டும் என்றும் அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் தயாரிப்பான அது, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்மூலம் காணாமல் போன அல்லது திருடப்பட்ட 7 லட்சத்திற்கும் அதிகமான திறன்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. அக்டோபர் மாதம் மட்டும் 50 ஆயிரம் திறன்பேசிகள் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 50 லட்சம் பேர் அச்செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

திறன்பேசிகளைத் தயாரிக்கும்போதே இணையப் பாதுகாப்புச் செயலியுடன் தயாரிப்பதாக சாம்சங், விவோ போன்ற நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.

ஆனால், ஆப்பிள் நிறுவனம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் திறன்பேசிகளிலும் புதிய இணையப் பாதுகாப்புச் செயலியைப் பதிவிறக்கம் செய்யவேண்டும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் குறித்து எச்சரிப்பதோடு, அனைத்துலகக் கைப்பேசி அடையாள எண்களையும் (IMEI) அந்தச் செயலி சரிபார்க்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும், கைப்பேசியில் எளிதில் தெரியும்படியும் பயனர்களுக்கு அணுகக்கூடியதாக இருப்பதையும் அதன் செயல்பாடுகள் முடக்கப்படவில்லை அல்லது கட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும் நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் மிகப்பெரிய திறன்பேசி சந்தையாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் 1.2 பில்லியன் திறன்பேசி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்