புதுடெல்லி: இந்தியா-சீனா இடையேயான உறவில் வர்த்தக விவகாரங்கள் மிக முக்கியப் பங்கு வகிப்பதாகச் சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு இந்திய மருந்துப் பொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய விரும்புவதாக பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
இந்தியப் பொருள்களை விற்பனை செய்ய சீனாவில் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட திரு விக்ரம் துரைசாமி, இந்த நடவடிக்கையின் மூலம் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய மருந்துகளின் அளவு கணிசமாக அதிகரிக்கும் என்றார்.
அண்மைக் காலமாக இந்தியாவில் சீன நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா-சீனா இடையே இருதரப்பு ஏற்றுமதியைச் சமநிலைப்படுத்த இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தகவல் தொழில்நுட்பம், மருந்துகள், வேளாண் துறை உள்ளிட்ட சந்தைகளை இந்திய நிறுவனங்களுக்குத் திறந்துவிட வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாகத் திரு விக்ரம் துரைசாமி அண்மையில் சீன வர்த்தகத் துறையின் மூத்த அதிகாரிகள் சிலரைச் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, பல்வேறு முக்கியமான உடன்பாடுகள் எட்டப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

