அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 88 ரூபாயைத் தாண்டியது

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

2 mins read
ff2f1b60-c7bc-4415-94de-adb73e9ad178
இவ்வாண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மூன்று விழுக்காடு சரிவுகண்டுள்ளது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிவுகண்டது.

வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 29) ஓர் அமெரிக்க டாலருக்கு 88.29 ரூபாய் என்ற அளவிற்கு இந்திய நாணயத்தின் மதிப்பு கீழிறங்கியது. பின்னர், இந்திய நேரப்படி பிற்பகல் 2.10 மணி நிலவரப்படி, ஓர் அமெரிக்க டாலருக்கு 88.12 ரூபாய் எனச் சற்று மீட்சிகண்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அமெரிக்க டாலர் விற்பனையே அதற்குக் காரணம் என வணிகர்கள் கூறினர்.

இதற்குமுன் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 87.95 ரூபாய் என்றிருந்ததே முன்னைய பெருவீழ்ச்சி.

இவ்வாண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மூன்று விழுக்காடு இறக்கம் கண்டு, ஆசியாவில் ஆக மோசமாகச் செயல்பட்ட நாணயம் எனும் வேண்டாப் பெருமையைத் தேடிக்கொண்டுள்ளது.

மேலும், சீன நாணயத்திற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமையன்று வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது.

“அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.90 என்று இறங்கியதும் இறக்குமதியாளர்களிடம் நிறைய தேவை இருப்பதைக் கண்டோம். அப்போது, ரிசர்வ் வங்கி தலையிடும் என எதிர்பார்த்தோம். ஆனால், 88 ரூபாயைத் தாண்டிய பிறகே அது தலையிட்டு, மேலும் சரியாமல் தடுத்தது,” என்று கோட்டக் செக்யூரிட்டிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நாணயப் பரிமாற்ற ஆய்வுப் பிரிவுத் தலைவர் அனிந்திய பானர்ஜி கூறினார்.

89 ரூபாய் என்பதே அடுத்த முக்கிய நிலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியப் பொருள்கள்மீது அமெரிக்கா 50 விழுக்காடு இறக்குமதி வரிவிதித்திருப்பது இந்திய ரூபாய் மதிப்புச் சரிவிற்குக் காரணமாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

அது இந்தியப் பொருளியல் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டில் இந்தியப் பொருளியல் 6.5 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று அந்நாட்டின் மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.

குறிப்புச் சொற்கள்