இந்திய ரூபாய் மதிப்பு சரிவு; பங்குச்சந்தை வீழ்ச்சி

தங்கம், வெள்ளி விலைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்தன

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு; பங்குச்சந்தை வீழ்ச்சி

2 mins read
992122e2-9b8a-44c3-9c10-79d120d3843d
மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தலைமையகத்தில் உள்ள இந்திய ரூபாயின் சின்னம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.93.35ஆக வீழ்ச்சிக் கண்டுள்ளது.

மத்திய கிழக்கு வட்டாரத்தில் போரால் நிலவும் பதற்றத்தாலும் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் இந்தியப் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

சென்செக்ஸ் 2,497 புள்ளிகள் சரிந்து 74,207.24ஆகவும், நிஃப்டி 776 புள்ளிகள் குறைந்து 23,002ஆகவும் நிலைபெற்றன.

இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகள் அனைத்துமே சரிவை/g சந்தித்தன.

கடந்த ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு ஏற்பட்ட இந்த மிகப்பெரிய ஒருநாள் வீழ்ச்சியால் இறக்குமதி செலவும் பணவீக்கமும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 111 அமெரிக்க டாலருக்கு மேலாக உச்சம் கண்டுள்ளதால் அனைத்துலக அளவில் பொருளியல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீடு சரிந்துள்ளதால், மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது.

அதனால், முதலீட்டாளர்களுக்கு7.6 டிரில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன. வியாழக்கிழமை மட்டும் எட்டு விழுக்காட்டுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து ரூ.770 என்ற 52 வாரத்தின் குறைந்தபட்ச விலையைப் பதிவு செய்துள்ளது.

வங்கியின் சந்தை மதிப்பு 12.96 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 11.88 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பை ஹெச்டிஎப்சி வங்கி இழந்துள்ளது.

இந்தியாவில் தங்கம், வெள்ளி விலைகளிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 
இந்தியாவில் தங்கம், வெள்ளி விலைகளிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.  - படம்: ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ்

தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி

பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவுடன் இணைந்து தங்கம், வெள்ளி விலைகளிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் 1 கிராமுக்கு 270 ரூபாய் சரிந்து ரூ.14,300க்கும், 1 கிராம் வெள்ளி விலை 10 ரூபாய் சரிந்து ரூ.265க்கும் விற்பனையானது.

ரூபாய் மதிப்பு சரிவால் அதிகரிக்கும் பொருளியல் நெருக்கடி

கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் கணிப்புப்படி, விரிவடைந்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, ஈரான் மோதலால் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை, வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது போன்ற காரணங்களால், அடுத்த 12 மாதங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக 95 வரை வீழ்ச்சியடையக்கூடும் என்ற அபாயம் நிலவுகிறது.

இந்தச் சரிவைச் சீர்செய்யவும், சந்தையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தீவிரமாகத் தன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும், ஒருபுறம் நாட்டின் பொருளியல் வளர்ச்சியைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயம், மறுபுறம் எகிறி வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய சவால் என இரண்டு முனைகளிலும் ரிசர்வ் வங்கி போராட வேண்டியுள்ளது.

இதற்கிடையில், கோல்ட்மேன் சாக்ஸ் இந்தியாவின் 2026 நிதியாண்டிற்கான பொருளியல் வளர்ச்சிக் கணிப்பை 6.5 விழுக்காடாகக் குறைத்துள்ளதோடு, பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்