டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 96 ஆகக் கடும் வீழ்ச்சி

டாலர் வலுவடைந்தது, ஈரான் போர் பதற்றம் காரணங்கள்

டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 96 ஆகக் கடும் வீழ்ச்சி

2 mins read
1f09e015-1cb6-4601-9f20-c0a5a6a40ac4
வெள்ளிக்கிழமை (மே 15) வணிகத் தொடக்கத்தில் 95.86 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, வணிக நேரத்தின் இறுதியில் 50 காசுகள் சரிந்து 96.14 ஆனது. - படம்: நியூஸ் ஏரீனா

புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக 96.14 ஆகக் குறைந்துள்ளது.

அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலரின் பலம் அதிகரிப்பு, ஈரான் போர் பதற்றம் ஆகியவை இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

வெள்ளிக்கிழமை (மே 15) வணிகத் தொடக்கத்தில் 95.86 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, வணிக நேரத்தின் இறுதியில் 50 காசுகள் சரிந்து 96.14 ஆனது.

இந்தியா தனது கச்சா எண்ணெய்த் தேவையில் 85 விழுக்காட்டுக்கும் மேலாக இறக்குமதி செய்வதால், டாலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சி இறக்குமதிச் செலவை அதிகரிக்கிறது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 107 டாலரைத் தாண்டியுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்துலக முக்கிய நாணயங்களுக்கு எதிரான டாலரின் வலிமையை அளவிடும் ‘டாலர் குறியீடு’ 99.05 ஆக உயர்ந்துள்ளது.

ஈரான்-அமெரிக்கா மோதல் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் டாலரை நோக்கிச் செல்வதால், இந்திய ரூபாய் போன்ற வளரும் நாட்டு நாணயங்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

கடந்த 2000ஆம் ஆண்டில் 45 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு, இன்று 96 ரூபாயைக் கடந்துள்ள நிலையில், இந்தச் சரிவு இந்தியப் பொருளியலில் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் எனப் பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவின் பணவீக்கம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் 8.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்