பிரிட்டனில் இந்திய மாணவர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது

2 mins read
9871f3ff-c19a-4f85-a5eb-8ec62f43edb5
2019ல் பிரிட்டனில் 36,612ஆக இருந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 2023ல் 136,921ஆக 273.9% அதிகரித்தது. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 52.2% அதிகரித்துள்ளதாக ராஜ்யசபாவில் கல்வி அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 18) தெரிவித்தது.

வெளிநாடுகளில் பயிலும் 892,989 இந்திய மாணவர்களில் ஆக அதிகமானோர் அமெரிக்காவில் (234,473 மாணவர்கள்) பயில்கின்றனர். அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் கனடாவும் (233,532) பிரிட்டனும் (136,921) வந்தன.

அமைச்சின் தரவைப் பொறுத்தமட்டில், வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2019லிருந்து நிலையாக அதிகரித்து வந்துள்ளது. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் 2020ஆம் ஆண்டு மட்டும் இதற்கு விதிவிலக்கு.

ஆக அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பயின்றாலும் பிரிட்டனில் பயில்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2019ல் அங்கு 36,612ஆக இருந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 2023ல் 136,921ஆக 273.9% அதிகரித்தது.

இதற்கு பிரிட்டனின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், பட்டதாரிகளுக்கான விசா (Graduate Route Visa) திட்டம் உட்பட பல முக்கியக் காரணங்கள் இருக்கலாம்.

2021 ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டம், பிரிட்டனில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டக்கல்வியை முடித்த பின்னர், வெளிநாட்டு மாணவர்கள் பிரிட்டனில் ஈராண்டுகள் வரை தங்க அனுமதிக்கிறது. முனைவர் பட்டம் முடித்தவர்கள், அங்கு மூன்றாண்டுகள் வரை தங்கலாம்.

மேலும் இந்த விசா திட்டம், பட்டதாரிகள் பிரிட்டனில் வேலை செய்யவும் மேற்கல்வி பயிலவும், வேலை கிடைத்தால் திறன்பெற்ற ஊழியர் விசாவுக்கு விண்ணப்பிக்கவும் அனுமதிக்கிறது.

பட்டதாரிகளுக்கான விசா திட்டம், குறிப்பாக இந்திய மாணவர்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது. 2021 முதல் 2023 வரை இந்த வகை விசாவை பெற்றவர்களில் 42 விழுக்காட்டினர் இந்திய மாணவர்கள்.

குறிப்புச் சொற்கள்