ஏஐ செயற்கைக்கோள் திட்டத்திற்கு இந்தியத் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ரூ.64.05 கோடி நிதி

ஏஐ செயற்கைக்கோள் திட்டத்திற்கு இந்தியத் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ரூ.64.05 கோடி நிதி

இந்தியத் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஒப்பந்தம்
படம்: டிடிநியூஸ்

12 Nov 2026 - 8:47 pm

2 mins read

புதுடெல்லி: தேசியப் பாதுகாப்புப் பயன்பாடுகளுக்காக, உள்நாட்டிலேயே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடனான மின்னணு உளவுச் செயற்கைக்கோள் தொகுப்பை (AI-ELINT) உருவாக்க, பெங்களூருவைச் சேர்ந்த ‘ஆஸ்ட்ரோம் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்திற்கு 64.05 கோடி ரூபாய் நிதி வழங்க இந்தியத் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (டிடிபி) ஒப்பந்தம் செய்துள்ளது.

அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் டிடிபி, ஆய்வு, மேம்பாடு, புத்தாக்க நிதியத்திலிருந்து (ஆர்டிஐ) இந்தத் தொகையை வழங்குகிறது. மொத்தம் ரூ.128.11 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்கு விருப்பப்படி மாற்றக்கூடிய கடன் (ஓசிடி) முறையில் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், தலா கிட்டத்தட்ட 50 கிலோ எடையுள்ள நுண் செயற்கைக்கோள்களை ஆஸ்ட்ரோம் நிறுவனம் உருவாக்கி, பூமியின் தாழ்வட்டப் பாதையில் (எல்இஓ) படிப்படியாக நிலைநிறுத்தவுள்ளது. மின்னணு உளவு சாதனம் (இஎல்ஐஎன்டி), ஏஐ அடிப்படையிலான தரைக்கட்டுப்பாட்டுத் தரவுச் செயலாக்க மென்பொருள், செயற்கைக்கோள்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு இணைப்புகள் ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் இதில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இது பரந்த நிலப்பரப்பைத் தொடர்ந்து கண்காணிக்கவும், பல்வேறு அலைவரிசைகளில் வரும் சமிக்ஞைகளைக் கண்டறிந்து பகுப்பாய்வு செய்யவும் உதவும்.

செயற்கைக்கோள்கள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறி ஒருங்கிணைந்த கட்டமைப்பாகச் செயல்படுவதால், கண்காணிப்புத் திறன் மேலும் துல்லியமாகும்.

மேலும், முக்கியத் தொழில்நுட்பங்களை 4ஆம் நிலையிலிருந்து (டிஆர்எல்-4) முழுமையான செயல்பாட்டு நிலையான 9ஆம் நிலைக்கு (டிஆர்எல்-9) உயர்த்துவதே இதன் இலக்கு.

“விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்கள், உள்நாட்டுப் பொறியியல், ஏஐ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கப் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. நாட்டின் வியூகத் திறன்களை வலுப்படுத்தும் இத்தகைய ஆழ்ந்த தொழில்நுட்பத் திட்டங்களுக்கு ஆர்டிஐ நிதியம் தொடர்ந்து ஆதரவளிக்கும்,” என்று டிடிபி செயலாளர் ராஜேஷ் குமார் பதக் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தப் பங்காளித்துவம் தங்களது தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துவதுடன், விண்வெளி, தேசியப் பாதுகாப்பின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என ஆஸ்ட்ரோம் நிறுவனப் பிரதிநிதி நம்பிக்கை தெரிவித்தார்.

இத்திட்டம் நவீன செயற்கைக்கோள், ஏஐ சார்ந்த விண்வெளித் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் தற்சார்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்