கல்விப் பணியில் இந்திய கிராமங்கள்

4 mins read
6eed054c-9460-40b2-ba21-255bc3c646ac
காரிவாலி கிராமம். - படம்: ஊடகம்
multi-img1 of 4

புதுடெல்லி: இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில் உள்ளது என்றார் மகாத்மா காந்தி.

கிராமங்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்பதுதான் அவரது கருத்து.

அவர் சும்மாவா சொல்லியிருப்பார். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு, மகாத்மாவின் கனவு நிறைவேறியுள்ளது.

இந்திய கிராமங்களின் வளர்ச்சி குறித்து கேள்விப்படும் வெளிநாட்டவர்களின் கண்கள் அகல விரிவதில் ஆச்சரியமில்லை.

அதிக மருத்துவர்களைக் கொண்ட கிராமம், அதிக ஆசிரியர்கள் உள்ள கிராமம், அதிக ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ள கிராமம் என்று சாதாரண குக்கிராமங்கள்கூட தங்களுக்கு எனத் தனி அடையாளத்தைப் பெற்று வருகின்றன.

‘மருத்துவர் கிராமம்’

அந்த வகையில், மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ளது காரிவாலி கிராமம். 30 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் இந்தக் குக்கிராமத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களாக உள்ளனர். அதனால்தான் அது ‘மருத்துவர் கிராமம்’ என மகாராஷ்டிர மக்களால் குறிப்பிடப்படுகிறது.

கடந்த 2000ஆம் ஆண்டு, அக்கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் பாட்டீல் என்பவர் ‘எம்பிபிஎஸ்’ பட்டம் பெற்றார். அன்று அவர் வகுத்த அந்த வெற்றிப் பாதைதான் அடுத்து வந்த இளையர்களுக்கு நல்ல வழி காட்டியுள்ளது.

சஞ்சய் பாட்டீலுக்குப் பிறகு மேலும் 19 பேர், கிராமத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மருத்துவச் சேவையாற்றி வருகிறார்கள். இத்தனைக்கும் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்டார் சஞ்சய்.

மருத்துவராகும் கனவைச் சுமந்து வந்த அவருக்கு, உடன்பிறந்த சகோதரர் உதவினாலும் கல்வியில் வழிகாட்ட யாரும் இல்லை. எனவே, இன்று சாதித்துக் காட்டியுள்ள சஞ்சய், தன் கிராமத்தில் உள்ள மற்ற பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக உள்ளார் சஞ்சய்.

“என் கிராமத்தில் பலரும் ரிக்ஷா வண்டி ஓட்டிப் பிழைத்தவர்கள். சிலர் கூலி வேலைக்கும் செங்கல் சூலைக்கும் சென்றனர். அப்போதுதான் பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டும், மருத்துவராக்க வேண்டும் என்று பலருக்கும் தோன்றியது. அது மட்டுமல்ல, பெண் குழந்தைகளையும் படிக்க வைத்தனர். அதன் பலனாக இன்று ‘மருத்துவர்களின் கிராமம்’ என்ற பெயர் கிடைத்தது என்று பெருமிதத்துடன் கூறுகிறார் சஞ்சய் பாட்டீல்.

‘ஐஏஎஸ் தொழிற்சாலை’

இந்தியாவில் எந்த இடத்திலும் இப்படிப்பட்ட தொழிற்சாலை இருக்காது.

உத்தரப் பிரதேசத்தில் மதோபட்டி கிராமத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வதுபோல், ஒவ்வோர் ஆண்டும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாகி வருகின்றனர். இங்கிருந்து இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் என இந்திய குடிமைப் பணியில் உள்ளனர்.

விண்வெளி, அணு ஆராய்ச்சி, நீதித்துறை, வங்கி என இக்கிராமத்தைச் சேர்ந்த பலர் அசத்தி வருகின்றனர்.

கடந்த 1914ஆம் ஆண்டு மதோபட்டி கிராமத்தைச் சேர்ந்த முகமத் முஸ்தபா என்பவர்தான் முதன்முதலாக குடிமைப்பணிக்குத் தேர்வானார். அதனைத் தொடர்ந்து மேலும் பலர் கடந்த 1950களில் இருந்து இந்நாள் வரை ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்வாகி வருகின்றனர்.

எந்தவிதமான சிறப்புப் பயிற்சிகள் இல்லாமலேயே மதோபட்டி இளையர்கள் சாதித்துக் காட்டியுள்ளனர். பயிற்சி மையங்கள், நூலகங்கள், ஆங்கிலவழிப் பள்ளிகள் என எல்லாவற்றுக்குமே, ‘இல்லை’ என்பதுதான் பதில். ஆனால், ‘முயற்சி’ என்ற சொல், ‘இல்லை’ என்ற வார்த்தையை விரட்டியடித்துள்ளது.

ஏற்கெனவே, தேர்வில் வெற்றி பெற்ற பெற்றோர்கள், அடுத்த தலைமுறையினர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகி உள்ளது.

கல்லூரிப் படிப்பின்போதே ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுகிறார்கள் இளையர்கள். பெற்றோரும் அவர்களை ஊக்குவிக்கிறார்கள்.

அண்மையில் மதோபட்டி கிராமம் குறித்து, ஊடகங்களில் படித்தபோது, “எங்களுக்கு படிப்பு என்பது ஒரு குடும்பத் தொழில். ஆனால், வணிகம் என்பது பொதுச்சேவைதான்,” என்று அக்கிராமத்து இளையர் ஒருவர் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தது.

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!

ஆங்கிலம் வெறும் மொழியல்ல, வாழ்க்கைமுறை

மேற்கு வங்கத்தில் உள்ளது காளியாசக் கிராமம். அங்கு மால்டா மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தில் விவசாயம்தான் முதன்மையான தொழில். அங்கு ஒவ்வொரு வீட்டிலும் ஓர் ஆசிரியர் இருக்கிறார்.

ஆங்கிலத்தை ஒரு மொழியாக, பாடமாக பார்க்காமல், அதை ஒரு வாழ்க்கைமுறையாகவே பின்பற்றுகின்றனர்.

காளியாசக் கிராமத்தில், எங்கு திரும்பினாலும் ஆங்கிலப் பயிற்சி வகுப்பு குறித்த அறிவிப்புகளைப் பார்க்க முடியும்.

இணையம்வழி ஆங்கில இலக்கிய வகுப்புகள் எடுப்போர் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

காளியாசக் கிராமத்தில் ஆங்கிலவழிப் பள்ளிகளும் அதிகம். அங்குள்ள இளையர்களுக்கு ‘ஷேக்ஸ்பியர்’ முதல் அண்மைய ஆங்கில உரையாடல் பாணி வரை அனைத்தும் அத்துபடி.

இதனால் வெளிமாநில மாணவர்களும்கூட இங்குள்ள உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர். காளியாசக் கிராமத்தில் இருந்து ஏராளமானோர் இதர இந்திய மாநிலங்களிலும் பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும் ஆங்கில ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர்.

இந்தியக் கிராமப்புறங்களில் இணையப் பயன்பாடு அதிகரித்து வருவதாக அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவித்து வருகின்றனர். மேற்குறிப்பிட்ட கிராமங்களின் வளர்ச்சிக்கு கல்வி மட்டுமல்ல, இணையமும் முக்கியக் காரணம்.

இந்தியக் கிராமங்களில் தாய்நாட்டின் ஆன்மா மட்டுமல்ல, கல்வியின் ஆன்மாவும் அங்குதான் உள்ளது.

குறிப்புச் சொற்கள்