புதுடெல்லி: பிலிப்பீன்ஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள, இனி இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நிபந்தனைகளின்கீழ் இந்தியர்கள் விசா இல்லாமல் அந்நாட்டுக்குள் நுழையலாம், 14 நாள்கள் தங்கலாம்.
பிலிப்பீன்சுக்குப் பயணம் மேற்கொள்வோர், ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் கடப்பிதழ், தங்குமிடச் சான்று, அங்கிருந்து நாடு திரும்புவதற்கான பயணச் சீட்டு, போதுமான நிதி இருப்புச் சான்று ஆகியவை அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், முப்பது நாள்கள் விசா இல்லாத நுழைவுத் திட்டமும் இந்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள நிரந்தரத் தங்கும் அனுமதி பெற்ற, செல்லுபடியாகும் நடப்பு விசா உள்ள இந்திய குடிமக்கள் 30 நாள்கள் நுழைவுத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள இயலும். இதற்கும் சில எளிய நிபந்தனைகள் உள்ளன.
இந்தப் புதிய சுற்றுலாக் கொள்கை, பல நாள்களில் கல்வி கற்கும் இந்திய மாணவர்கள், பணியாற்றும் இந்திய நிபுணர்களின் பிலிப்பீன்ஸ் பயணத்தை எளிதாக்கும் எனக் கருதப்படுகிறது.
சுற்றுலாத்துறை வளர்ச்சி காண்பது மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கு இடையேயான கலாசாரப் பரிமாற்றம், பொருளியல் ஒத்துழைப்பையும் மேற்குறிப்பிட்ட அறிவிப்பு ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது.
கொவிட் அச்சுறுத்தலுக்குப் பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள இந்திய சுற்றுப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிலிப்பீன்ஸ் சுற்றுலா சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.