தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரம்மபுத்திரா நதியில் $100 பில்லியன் இந்தியாவின் நீர்மின் திட்டங்கள்

2 mins read
302f1b6a-2230-43f4-906c-da84fcf6adc1
S$220.43 பில்லியன் செலவில் பிரம்மபுத்ரா நதியின் மேல் பகுதியில் மிகப்பெரிய அணையை சீனா கட்டிவருகிறது. - படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியா 6.4 லட்சம் கோடி ரூபாய் (S$99.85 பில்லியன்) பிரம்மாண்டத் திட்டத்தை அறிவித்துள்ளது.

வரும் 2047ஆம் ஆண்டுக்குள் பிரம்மபுத்திரா படுகையில் இருந்து 76 ஜிகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய புனல்மின் நிலையங்கள் அமைக்கப்படும். பிரம்மபுத்திரா படுகையிலிருந்து இந்த மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதற்காக 6.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பிரம்மாண்டத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று இந்தியாவின் மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்தது.

இத்திட்டத்தின்கீழ், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரம்மபுத்திராவின் 12 துணைப் படுகைகளில், 208 பெரிய நீர்மின் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சீனாவின் திபெத்தில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி, இந்தியா, பங்ளாதேஷ் வழியாகப் பாய்ந்து வங்கக் கடலில் சேர்கிறது. பிரம்மபுத்திரா பாயும் இந்தியப் பகுதியில் இருந்து குறிப்பிடத்தக்க புனல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

புதிய அணை இந்தியாவின் மிகப்பெரிய அணையாக இருக்கும்.

சீனாவில் யார்லுங் சாங்போ என்று அழைக்கப்படும் பிரம்மபுத்திரா நதியின் மேல்பகுதியில் உலகின் மிகப்பெரிய அணையைக் கட்டுகிறது சீனா. அந்த அணையினால், வறட்சியான காலங்களில் இந்தியப் பகுதிக்கான நீர்வரத்து 85% வரை குறையலாம் என்ற அஞ்சப்படும் நிலையில், இந்தியா புதிய அணைத்திட்டத்தை அறிவித்துள்ளது.

சீனாவின் அணையினால் நீர்வரத்து குறைவதுடன் அசாம், பங்ளாதேஷ் ஆற்றுப் படுகைகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு வளம் சேர்க்கும் வண்டல் மண் வருவதும் தடுக்கப்படும். அணை அமைந்துள்ள இமயமலைப் பகுதி நிலநடுக்க அபாயம் நிறைந்த ஒரு பகுதியாகும். இவ்வளவு பெரிய நீர்த் தேக்கத்தை அமைப்பது அப்பகுதியில் நில அதிர்வுகளைத் தூண்டலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

மேலும், அருணாசலப் பிரதேசம், அசாம் பகுதிகளிலும் பங்ளாதேஷிலும் பிரம்மபுத்திரா நதியை நம்பியிருக்கும் நீர்வாழ் உயிரினங்கள், தனித்துவமான பல்லுயிர்க்கோளமும் பாதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்