புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் வாங்குவதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், இத்தகவல் உண்மையா என்பது தமக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் ஒருவேளை இது உண்மையெனில், இந்தியா மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
இனி நடக்கப்போவது என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் கூறினார்.
இந்தியா, ரஷ்யா இடையேயான எண்ணெய் விற்பனை தொடர்பாக, இந்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவின் எரிசக்தி கொள்கை நாட்டின் நலன், சந்தை நிலவரத்தைப் பொறுத்தே எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
“இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதியை நிறுத்திவிட்டனவா என்பது குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் அரசாங்கத்துக்கு கிடைக்கவில்லை. நாட்டின் எரிசக்தி ஆதாரத் தேவை குறித்து அனைவருக்கும் நன்கு தெரியும்,” என்றார் ரன்தீர் ஜெய்ஸ்வால்.
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது இந்தியா. கடந்த 2022ஆம் ஆண்டு, ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகள் விதித்தன. அப்போது முதல் தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா முக்கியமான இடத்தை வகித்து வருகிறது.
இதனால் கோபம் அடைந்த அமெரிக்க நிர்வாகம், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அந்நாட்டில் 25% வரிவிதித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் வாங்குவதற்காக அபராதம் விதித்தது.
இத்தகைய சூழலில், இந்தியன் ஆயில் கார்ப், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்திவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவும் ரஷ்யாவும் நிலையான, காலத்தால் சோதிக்கப்பட்ட கூட்டாண்மையைக் கொண்டுள்ளன. இதேபோல் இந்தியாவும் அமெரிக்காவும் விரிவான, உலகளாவிய பங்காளித்துவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
இந்த பங்காளித்துவம் பல்வேறு சவால்களை, மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது என்றும், இருதரப்பு உறவை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா முனைப்பாக உள்ளது என்றும் திரு ரன்தீர் ஜெய்ஸ்வால் மேலும் கூறியுள்ளார்.

