புதுடெல்லி: இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி புதன்கிழமை (ஏப்ரல் 1) தொடங்குகிறது.
அந்தப் பணி ஏறத்தாழ ஓராண்டு காலம் நீடிக்கும் என்றும் 2027 மார்ச்சில் நிறைவுறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மக்கள்தொகையைக் கணக்கெடுப்பது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்து வருகிறது. ஆகக் கடைசியாக 2011ஆம் ஆண்டு அந்தப் பணி நடைபெற்றது. அது, இந்தியா விடுதலை அடைந்த பின்னர் நடத்தப்பட்ட ஏழாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு.
எட்டாவது முறையாக அந்தக் கணக்கெடுப்புப் பணி 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக அந்தப் பணி தள்ளிப்போனது.
பின்னர் ஒவ்வோர் ஆண்டும் ஒத்திவைக்கப்பட்ட அது, ஒருவழியாக இந்த ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இப்போது தொடங்குவது முதற்கட்டக் கணக்கெடுப்பு. இந்தப் பணி செப்டம்பர் 30 வரை நீடிக்கும்.
முப்பது லட்சத்துக்கும் (மூன்று மில்லியன்) அதிகமான அதிகாரிகள் இந்த ஓராண்டுப் பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்கள் கணக்கெடுப்பார்கள்.
இரண்டுவிதமான பட்டியல்களை அவர்கள் தயார்செய்வார்கள். வீட்டின் நிலைமை முதல் பட்டியலிலும் குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களின் பொருளியல், சமூக நிலைகள் மற்றொரு பட்டியலிலும் இடம்பெறும் என்று இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறை ஆணையாளர் மிருதுஞ்சய் குமார் நாராயண் செய்தியாளர்களிடம் கூறினார்.
முதலாவது பட்டியல் வீடுகளையும் அவற்றின் வீட்டு நிலைமைகளையும், இரண்டாவது பட்டியல் குடியிருப்பாளர்களையும் அவர்களின் பொருளியல் மற்றும் சமூக அளவுகோல்களையும் பட்டியலிடும் என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் மிருதுஞ்சய் குமார் நாராயண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திரட்டப்படும் தகவல்கள் முதன்முறை மின்னிலக்கத் தரவுகளாகச் சேமிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
2023ஆம் ஆண்டின் நிலவரப்படி, இந்தியாவின் மக்கள்தொகை 1.4 பில்லியன். அந்த ஆண்டில்தான் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா கடந்தது.

