புதுடெல்லி: உந்துகணை, செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கைவிடுகிறது.
அந்தப் பணிகளைப் படிப்படியாகத் தனியார் துறையிடம் ஒப்படைக்கவும் அது திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் விண்வெளித் துறை மாபெரும் கட்டமைப்பு மாற்றத்திற்குத் தயாராகி வருவதாக இன்-ஸ்பேஸ் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ இனி உற்பத்தியாளராகச் செயல்படாமல், ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பாகத் தன் கவனத்தைச் செலுத்தும் என்றும் உந்துகணைத் தயாரிப்புப் பணிகள் அனைத்தும் தனியார், பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இம்மாற்றம் சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனமான எஸ்எஸ்எல்வி மூலம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்தகட்டமாக பிஎஸ்எல்வி, இந்தியாவின் சக்திவாய்ந்த மார்க்-3 (LVM3) உந்துகணைகளும் தனியார்மயமாக்கலை நோக்கி நகர்ந்து வருகின்றன என்றார் அவர்.
இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை வர்த்தக ரீதியாகப் பெருவளர்ச்சி கண்டுள்ளதால் இத்தகைய சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


