‘என்விஎஸ்-03’ வழிகாட்டல் செயற்கைக்கோளை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை

‘என்விஎஸ்-03’ வழிகாட்டல் செயற்கைக்கோளை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை

படம்: இஸ்ரோ எக்ஸ் பக்கம்

31 Oct 2026 - 4:44 pm

2 mins read

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), உள்நாட்டில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் வழிகாட்டல் அமைப்பான ‘நாவிக்’ (NAVIC) சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ‘என்விஎஸ்-03’ (NVS-03) என்ற அடுத்த தலைமுறை வழிகாட்டல் செயற்கைக்கோளை ‘ஜிஎஸ்எல்வி-எஃப்18’ (GSLV-F18) என்ற உந்துகணை மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) இரவு 11:51 மணிக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

அடுத்த 18 நிமிடங்களில், 2,250 கிலோ எடைகொண்ட என்விஎஸ்-03 செயற்கைக்கோளைப் புவி ஒத்திசைவு மாற்றப்பாதையில் (Geosynchronous Transfer Orbit) உந்துகணை துல்லியமாக நிலைநிறுத்தியது.

இந்த விண்வெளித் திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சமாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘அணு கடிகாரம்’ (Atomic Clock) பொருத்தப்பட்டுள்ளது.

அதன் மூலம், துல்லியமான நேரம், இருப்பிடத் தகவல்களை தடையின்றி வழங்க முடியும். மேலும், அதில் பொருத்தப்பட்டுள்ள நவீனக் கருவிகள் சாதாரண மக்களின் திறன்பேசி பயன்பாடுகள் முதல் நாட்டின் பாதுகாப்புத் தேவைகள் வரை பல்வேறு துறைகளுக்கு உதவ உள்ளன.

அமெரிக்காவின் ஜிபிஎஸ் (GPS) அமைப்பிற்கு மாற்றுத் தீர்வாகத் தொடங்கப்பட்ட நாவிக் அமைப்பை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவர குறைந்தது நான்கு முதல் ஏழு செயற்கைக்கோள்கள் வரை தேவைப்படுகின்றன. என்விஎஸ்-01 வெற்றியைத் தொடர்ந்து, தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள என்விஎஸ்-03 செயற்கைக்கோள், இந்திய வட்டார வழிகாட்டல் அமைப்பின் திறனை மேலும் உயர்த்தும்.

ஜிஎஸ்எல்வி-எஃப்18 உந்துகணை வெற்றிகரமாக திட்டமிட்ட பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தியதை இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் உறுதி செய்தார்.

இந்தச் சாதனைக்கு உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள், தொழிற்துறை பங்காளிகள், கல்வியாளர்களுக்கு அவர் தமது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

விண்வெளித்துறையில் இந்தியாவின் தற்சார்புப் பயணத்திற்கு இந்த வெற்றி மற்றுமொரு வலுவான சான்றாக அமைந்துள்ளதாக இஸ்‌ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்