ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தனது நூறாவது உந்துகணையை விண்ணில் செலுத்தி வரலாறு படைத்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (ஜனவரி 29) காலை 6.23 மணிக்கு என்விஎஸ்-02 என்ற செயற்கைக்கோளைச் சுமந்துகொண்டு ஜிஎஸ்எல்வி-எஃப்15 உந்துகணை வான் நோக்கிக் கிளம்பியது.
ஜிஎஸ்எல்வி உந்துகணை ஏவப்பட்டிருப்பது இது 17ஆவது முறை.
அதற்கு 19 நிமிடங்களுக்குப் பிறகு, 322.93 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் என்விஎஸ்-02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் அணுக் கடிகாரங்களுடன் கூடிய, 2,250 கிலோ எடைகொண்ட அந்த இரண்டாம் தலைமுறைச் செயற்கைக்கோளானது தரை, கடல், வான்வெளிப் போக்குவரத்துக் கண்காணிப்பு, பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ (ISRO) தெரிவித்துள்ளது.