தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விண்ணுக்கு ஆறு மாதத்தில் ஆறு உந்துகணை: இஸ்ரோவின் அற்புத ஆண்டு 2025

2 mins read
f741f4ab-e735-4363-8861-4654fa19ecdf
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) பிஎஸ்எல்வி சி-60 உந்துகணை மூலம் ‘ஸ்பேடெக்ஸ்’ (SpaDeX) விண்கலன்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. - படம்: இபிஏ

புதுடெல்லி: புத்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியா அடுத்தடுத்து ஆறு உந்துகணைகளை (ராக்கெட்) விண்ணில் ஏவ உள்ளதாகவும் அதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார்.

“2025ம் ஆண்டு இஸ்ரோவிற்கு மிகவும் முக்கியமான ஆண்டாக இருக்கும்.

“ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் ஆறு உந்துகணைகளை ஏவுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

“ககன்யான் திட்டத்தின் இறுதிப் பயணத்திற்கு முன்னோடியாக, பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்புவது, உலகின் மிக விலை உயர்ந்த இந்தோ-அமெரிக்கா நிசார் செயற்கைக்கோள் உள்ளிட்டவற்றில் விண்ணில் பாய்ச்சுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன.

“தொடக்கமாக, ஜனவரி மாதம் என்விஎஸ் 2 செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது. இது இஸ்ரோவின் 100வது ஏவுதல் ஆகும்.

“இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து தயாரித்து வரும் நாசா-இஸ்ரோ சார் (நிசார் - NISAR) செயற்கைக்கோள் உலகிலேயே ஆக அதிகச் செலவில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

“கிட்டத்தட்ட 12,505 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்படும் அந்த செயற்கைக்கோளை மார்ச் மாதம் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.

“கிட்டத்தட்ட எல்லாவிதமான நில, பனிப் பிரதேசங்களை 12 நாள்களுக்கு ஒருமுறை ஸ்கேன் செய்யக்கூடிய வல்லமை பெற்றது அந்த செயற்கைக்கோள்.

“வியோமித்ரா மிஷன் உட்பட அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக நடந்த பிறகு, விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள்,” என்றார் அமைச்சர் ஜிதேந்திர சிங்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், “புதிய ஆண்டில் இஸ்ரோ நான்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள், மூன்று பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள், ஓர் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஆகியவற்றை விண்ணில் செலுத்த உள்ளோம்.

“2025ம் ஆண்டு விண்வெளித் துறைக்கு மிகவும் உற்சாகமான ஆண்டாக இருக்கும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்